கணவன் தற்கொலை.. 'காபி டே' நிறுவனத்தின் கடனை அடைத்து தன்னம்பிக்கையுடன் வெற்றிநடை போடும் மாளவிகா ஹெக்டே!

Update: 2022-01-13 06:11 GMT

இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பல கிளைகளுடன் திகழ்ந்து வந்த காபி டே நிறுவனம் கடன் தொல்லையால் கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டிருந்த நிலையில் தனி பெண்ணாக போராடிய மாளவிகா ஹெக்டெ ஒரு வருடத்திலேயே கடன் தொகையை பாதியளவு குறைத்து சாதனை படைத்துள்ளார்.

இந்தியாவில் மிகவும் பிரபலமான கடைகளில் கபே காப்பி டே வும் ஒன்றாகும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், பெண்கள், சிறுவர்கள் என பலரும் ஆர்வமுடன் காபி குடிப்பது வழக்கம். இந்த நிறுவனத்தை கர்நாடகாவை சேர்ந்த சித்தார்த்தா நடத்தி வந்தார். இந்நிறுவனம் மிக வேகமாக வளர்ந்து வந்த நிலையில், திடீரென்று சறுக்கலை சந்திக்க நேரிட்டது. அதாவது மற்ற நிறுவனங்களுடன் போட்டிபோடுவதற்காக சித்தார்த் பல ஆயிரம் கோடி ரூபாய் கடனை வாங்கி முதலீடு செய்துள்ளார். ஆனால் பங்குகளை விட கடன் தொல்லை அதிகரிக்க தொடங்கியது. 


இதனால் கடந்த 2019ம் ஆண்டு ஜூலை 29ம் தேதி மங்களூருவில் உள்ள நேத்ரா நதியில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இவரது தற்கொலை தொழிலதிபர்களிடம் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. அவரது மனைவிக்கு மிகப்பெரிய பேரிடியாக அமைந்தது. இதன் பின்னர் காபி டே நிறுவனத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும் எனவும் கேள்விக்குறியாக இருந்தது. அந்த நிறுவனத்தை நம்பி பல ஆயிரம் குடும்பங்கள் இருந்தது. இதனால் காபி டே மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. அதனை முறியடிக்கின்ற வகையில் சித்தார்த் மனைவி மாளவிகா ஹெக்டே ஒரு அசாதாரணமான முடிவை எடுத்துள்ளார்.

அதன்படி கடந்த 2020ம் ஆண்டு டிசம்பரில் காபி டே நிறுவனத்தின் செயல் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் மாளவிகா ஹெக்டே. இவரது கடும் உழைப்பினால் மார்ச் 31, 2021 படி அந்த நிறுவனத்தின் கடன் தொகையை ரூ.1,731 கோடியாக குறைத்துள்ளார். இந்த தகவல் அனைத்து ஊடகங்களையும் ஆக்கிரமித்துள்ளது. இணையங்களில் மாளவிகா சிங்கப்பெண்ணாக பாராட்டப்பட்டு வருகிறார். சுமார் 7200 கோடி கடனில் இருந்த காபி டே நிறுவனம் மாளவிகாவின் முயற்சியால் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கணவன் விட்டுச்சென்ற நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்துவது மட்டுமின்றி அதன் கடன்களையும் குறைத்து, பல ஆயிரம் குடும்பங்களின் வாழ்வில் ஒளியேற்றி வைத்துள்ளார் மாளவிகா என்று புகழாரம் சூட்டி வருகின்றனர்.

Source:Malaimurasu

Image Courtesy: India Times

Tags:    

Similar News