சென்னை குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய தீவிரவாதி கைது - சுவாரசிய பின்னணி.!
சென்னையில் 300 கிராம் தங்கத்தை வழிப்பறி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் அல் உம்மா இயக்கத்துடன் தொடர்புடையவர் என்றும் குண்டு வெடிப்பு வழக்கில் சம்பந்தப்பட்டவர் என்றும் தெரிய வந்துள்ளது.
கடந்த மே 5ஆம் தேதி சென்னையில் பெரிய மேடு சென்ட்ரல் அருகே நகை வியாபாரியான சுராஜ் என்பவரிடம் 300 கிராம் தங்கம் மற்றும் ₹7.5 லட்சம் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் இருவர் வழிப்பறி செய்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரித்து வந்த காவல் துறையினர் இதில் சம்பந்தப்பட்ட யாசின் என்பவரைக் கைது செய்து விசாரணை செய்தனர்.
அதில் அவரது கூட்டாளி குறித்து கிடைத்த தகவலின் அடிப்படையில் ரபீக் என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். ரபீக்கிடம் விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரிய வந்துள்ளன. ரபீக் பாகிஸ்தானில் இருந்து கள்ள நோட்டுக்களை கடத்தி வந்து தமிழகத்தில் புழக்கத்தில் விடும் ஏஜன்டாக செயல்பட்டதாக சி.பி.சி.ஐ.டி.யி-ல் வழக்கு உள்ளதும், அல் உம்மா இயக்கத்துடன் தொடர்பில் உள்ள ரபீக்குக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த குண்டு வெடிப்பில் தொடர்பு இருப்பதாக தேசிய புலனாய்வு முகமை வழக்கு பதிவு செய்திருப்பதும் தெரிய வந்தது.
மேலும் ரபீக்குக்கு சிமி மற்றும் ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதும், 2008ஆம் ஆண்டு கிரெடிட் கார்டு மோசடி வழக்கு, 2010ஆம் ஆண்டு ஒரு வழிப்பறி வழக்கும், 2017ஆம் ஆண்டு ஒரு வழிப்பறி வழக்கும் என்று ஏகப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்துள்ளது. தேசிய புலனாய்வு முகமை மற்றும் சி.பி.சி.ஐ.டி-யால் தேடப்பட்டு வந்த தீவிரவாதி ரபீக் வழிப்பறி வழக்கில் சென்னை காவல் துறையினரிடம் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ரபீக்கை கைது செய்து குண்டு வெடிப்பு வழக்கு குறித்து விசாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Source: தி ஹிந்து தமிழ்