இந்துக்களை அவமதித்த பாதிரியார்- நீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு!

Update: 2022-01-09 00:30 GMT

இந்து சமூகத்தையும் பாரத மாதாவையும் அவதூறாக பேசியதற்காக கடந்த ஆண்டு ஜூலை மாதம் கன்னியாகுமரியை சேர்ந்த கத்தோலிக்க பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. 'பாரத மாதா' மற்றும் 'பூமி தேவி'யை கொச்சையாக பேசியதற்காக இவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 295A பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா, இந்து மதம் குறித்தும் பாரதமாதா குறித்தும் பாரதப் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோரை மிகவும் கொச்சையான வார்த்தைகளால் பேசியதை தொடர்ந்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்திய தண்டனைச் சட்டத்தின் 143, 153A, 269, 295A, 505(2), 506(1) மற்றும் தொற்றுநோய்கள் பிரிவு 3(1987)உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை ரத்து செய்யக் கோரி பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா தாக்கல் செய்த மனுவை ஜி.ஆர்.சுவாமிநாதன் தலைமையிலான சென்னை உயர்நீதிமன்ற அமர்வு விசாரித்தது.

அப்போது குற்றம் சாட்டப்பட்ட ஜார்ஜ் பொன்னையா "பாரத மாதா" மற்றும் "பூமி தேவி" ஆகியோருக்கு எதிராக அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தி உள்ளதால் இந்திய தண்டனைச் சட்டத்தின் 295A பிரிவின் கீழ் மத உணர்வுகளைப் புண்படுத்தும் குற்றத்தை செய்துள்ளதாக நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் குறிப்பிட்டார். எனவே தன்மீது தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று பாதிரியார் தாக்கல் செய்த மனுவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற ஒரு கிறிஸ்தவ நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர் அசுத்தமாக இருக்கும் பாரதமாதாவின் மீது தங்களின் கால் பட்டால் நோய் தொற்றிக் கொள்ளும் என்பதால்தான் தாங்கள் செருப்பு அணிந்து கொள்வதாக கூறியிருந்தார். மேலும் பாரத பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் குறித்து அவதூறாகப் பேசினார். பின்னர் கைது நடவடிக்கைக்கு பயந்து மன்னிப்பு கேட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது குறித்து தீர்ப்பில் குறிப்பிட்ட நீதிபதி, "விடுதலைப் போராட்டத்தின் போது 'வந்தே மாதரம்' விடுதலைப் போரின் முழக்கமாகியது. காவி பூண்டு ருத்ராக்ஷம் தரித்த அன்னை சக்தியாக இந்த தேசம் கருதப்பட்டது. 1936ல் மகாத்மா காந்தியே வாரணாசியில் பாரதமாதா கோவிலை திறந்து வைத்தார். அது போன்று இந்தியாவின் பல பகுதிகளிலும், ஏன்‌ தமிழ்நாட்டிலும் கூட பல கோவில்களில் ‌பாரதமாதாவுக்கு சிலை‌ இருக்கிறது. எனவே பூமா தேவியையும் பாரத மாதாவையும் நோய்களின் ஊற்றுக்கண் என்பது போல் சித்தரித்த பாதிரியாரின் பேச்சு இந்து மதத்தில் நம்பிக்கை கொண்டவர்களின் மத நம்பிக்கைகளை புண்படுத்தும் விதமாக இருக்கிறது என்பதில் ஐயமே இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்து மதத்தில் நம்பிக்கை கொண்ட அனைவராலும் பூமா தேவி கடவுளாகப் பார்க்கப்படும் நிலையில் பாதிரியாரின் பேச்சு அந்த நம்பிக்கையை அவமதிக்கும் விதமாக இருப்பதாக குறிப்பிட்டு நீதிபதி வழக்கை ரத்து செய்ய மறுத்து விட்டார். கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்துக்களை விட கிறிஸ்தவர்கள் அதிகம் இருப்பதையும், அவர்களுள் பலர் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை பின்பற்றி நடப்பதையும் குறிப்பிட்ட நீதிபதி, ஒரு "இவாஞ்சலிஸ்ட்டாக" இருந்து கொண்டு பிறர் மத நம்பிக்கைகள் புண்படும் வண்ணம் பேசி விட்டு அதற்கான தண்டனையில் இருந்து விலக்கு கோர முயலக் கூடாது என்றும் இந்து மதம்‌ மீது வெறுப்பைக் கக்கும் பல கிறிஸ்தவ பல போதகர்களின் நெற்றிப் பொட்டில் அடிப்பது போன்று தீர்ப்பளித்துள்ளார்.

Source: LiveLaw

Tags:    

Similar News