திருப்பதியில் அலைமோதும் கூட்டம் - மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து கூடுதல் பேருந்துகள்

Update: 2022-02-16 11:15 GMT

சென்னையில் இருந்து திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்காக செல்லும் பக்தர்களின் வசதியை கவனத்தில் கொண்டு சென்னை மாதவரம் பஸ் நிலையத்தில் இருந்து 52 ஆந்திர பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.


கொரோனா பரவல் காரணமாக கடந்த சில மாதங்களாக திருப்பதியில் ஏழுமலையான் தரிசனத்திற்கு மிகுந்த குறைந்த அளவிலான பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் தினமும் 10 ஆயிரம் வீதம் இலவச தரிசன டிக்கெட்டுகளை வழங்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது.


இதனை முன்னிட்டு தற்பொழுது திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது, ஆனால் அந்த அளவிற்கு பேருந்து வசதி இல்லை என்பதால் பெரும்பாலான பக்தர்கள் அவதிக்குள்ளாயினர்.

இந்நிலையில் ஆந்திர போக்குவரத்து கழகம் தமிழகத்தில் இருந்து முக்கியமான பேருந்துநிலையத்தில் இருந்து வரும் பக்தர்களுக்காக பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி உள்ளது. குறிப்பாக வேலூருக்கு 34 ஆந்திர பேருந்துகள் இயக்கப்படுகின்றன தினமும், அதேபோல் சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் பக்தர்களின் வசதிக்காக 52 ஆந்திர பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகள் மாதவரம் பஸ் நிலையத்தில் இருந்து புறப்படுகின்றன.


திருப்பதி ஏழுமலையானை நேற்று ஒரு நாள் மட்டும் 37,794 பேர் தரிசனம் செய்துள்ளனர். 2.58 கோடி ரூபாய் உண்டியல் வசூல் ஆனது.



Source - Maalai Malar

Similar News