'ஸ்ரீ ராமபிரானுக்கு அணில் உதவியது போல இலங்கை தமிழர்களுக்கு உதவியாக இருப்பேன்' - இலங்கையில் அண்ணாமலை நம்பிக்கை!
"13-வது சரத்தை அமல்படுத்த வேண்டும் என்பது இந்தியாவின் நிலைப்பாடு. 13-வது அரசியல் சாசனம் விரைவில் அமல்படுத்தப்பட வாய்ப்புகள் உள்ளன." என்று இலங்கையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அண்ணாமலை கூறினார்.
இந்தியாவின் அண்டை நாடான இலங்கை, வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதனால் மக்களின் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்துள்ளதால், அனைத்து தரப்பட்ட மக்களின் வாழ்வுநிலை பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இலங்கையில் வசிக்கும் தமிழர்களும் பெரும் இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில், இலங்கை மலையகத்திலுள்ள 'இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்' சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிக்கு, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்களை அழைத்ததை தொடர்ந்து, அண்ணாமலை அவர்கள் 4 நாள் சுற்றுப்பயணமாக இலங்கை சென்றுள்ளார்.
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயிலில் வழிபாடு நடத்திவிட்டு, யாழ்ப்பாணம் சிறையில் உள்ள சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை சந்தித்த பின்னர், பல்வேறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடல் நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை : இலங்கைக்கு இந்தியா பல்வேறு வகையில் உதவிகளை அளித்து வருகிறது. இலங்கையின் 13வது சரத்தை அமல்படுத்த வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைபாடு. இலங்கையில் இருந்து அகதிகளாக இந்தியா நோக்கி வருபவர்கள் மீது கடுமையான சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இலங்கை மக்களை தொப்புள்கொடி உறவுகளாக அன்புடன் ஆதரவு கரம் நீட்டி வரவேற்கிறோம். ஸ்ரீ ராமபிரானுக்கு அணில் உதவியது போல இலங்கை தமிழர்களுக்கு உதவியாக இருப்பேன்.
என்று பேசினார் .