'திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் தலைமையிலான UPA அரசு ஜல்லிக்கட்டை தடை செய்தது போல, தமிழர்களின் கலாச்சார விழாக்களை ஒவ்வொன்றாகத் தடை செய்வதே திமுகவின் நோக்கம்' என அண்ணாமலை திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
பொங்கலையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு, ரேக்ளா ரேஸ், ஏறு தளுவுதல், எருது விடும் விழா உள்ளிட்டவை நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கோபசந்திரம் பகுதியில் எருது விடும் விழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மேலும் விழாவில் பங்கேற்க 100க்கும் மேற்பட்ட காளைகள் அழைத்து வரப்பட்டன. மாடுப்பிடி வீரர்களும் அங்கு குவிந்தனர்.
இந்த போட்டிக்கு முறையாக அனுமதி வழங்கப்படவில்லை எனக்கூறி, போலிசார் அனைவரையும் அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தியுள்ளனர். அந்த இடத்தை விட்டு புறப்படுமாறும் ஆணையிட்டுள்ளனர்.
அப்போது ஆத்திரமடைந்த இளைஞர்கள் கிருஷ்ணகிரி-ஓசூர் சாலையில் கற்களை கொட்டி போக்குவரத்தை முடக்கி கலவரத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பதற்றமான சூழல் நிலவியது.
திடீரென ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அதை போலிசார் தடுத்ததால் பல்வேறு பகுதிகளில் இருந்து இளைஞர் போலிசார் மீது கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலை போலிசார் தடுக்க முடியாமல் திணறியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டதாக தெரிகிறது.
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கற்களை குவித்த இளைஞர்கள், வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பின்னர் இளைஞர்கள் தாங்களாகவே எருதுவிடும் விழாவை நடத்த முயன்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எருதுவிடும் விழாவிற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தும், கலைந்து செல்லாத இளைஞர்கள், மறியலில் ஈடுபட்டதால் 3 மணிநேரத்திற்கு மேலாக தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இளைஞர்களின் இந்த செயலால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தியடைந்தனர்.