வன மகோத்சவத்தை முன்னிட்டு காவேரி கூக்குரல் சார்பாக மரம் நடும் திருவிழா - தமிழ்நாட்டில் ஒரே வாரத்தில் 1.61 லட்சம் மரங்களை நட்ட விவசாயிகள்
வன மகோத்சவத்தை முன்னிட்டு காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஒரே வாரத்தில் 1.61 லட்சம் மரக்கன்றுகளை விவசாயிகள் தங்கள் நிலங்களில் நடவு செய்துள்ளனர்.
இந்தியா முழுவதும் சுற்றுக்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மக்களிடம் மரம் வளர்க்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாகவும் ஆண்டுதோறும் ஜூலை முதல் வாரம் தேசிய வன மகோத்சவமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு காவேரி கூக்குரல் இயக்கம் மூலமாக விவசாய நிலங்களில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வுகள் தமிழ்நாடு முழுவதும் ஜூலை 1 ஆம் தேதி தொடங்கப்பட்டது. மொத்தம் 37 மாவட்டங்களில், 136 விவசாயிகளுடைய நிலங்களில் 1,61,133 மரங்கள் நடப்பட்டுள்ளன.
மண்வள மேம்பாடு, சுற்றுக்சூழல் மேம்பாடு, நதிகளை மீட்டெடுத்தல் போன்ற நோக்கங்களுடன் விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதமாகவும் செயல்பட்டு வருகிறது காவேரி கூக்குரல் இயக்கம். இதன் ஓர் அங்கமாக ஈஷா நாற்றுப்பண்ணைகளில் இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட விலை மதிப்பு மிக்க டிம்பர் மரங்களை விவசாயிகளுக்கு 3 ரூபாய் மானிய விலையில் வழங்கி வருகிறது. தேக்கு, செம்மரம், சந்தனம், வேங்கை, மலைவேம்பு, மஞ்சள் கடம்பு, ரோஸ்வுட், கருமருது போன்ற 18 வகையான டிம்பர் மரங்கள் வழங்கப்படுகிறது.
வன மகோத்சவத்தின் போது மட்டுமின்றி உலக சுற்றுச்சூழல் தினம், காந்தி ஜெயந்தி, நதிகளுக்கு புத்துயிர் ஊட்டும் தினம், நம்மாழ்வார் ஐயா நினைவு நாள், நெல் ஜெயராமன் ஐயா நினைவு நாள், மரம் தங்கசாமி ஐயா நினைவு நாள் போன்ற சிறப்பு நாட்களிலும் காவேரி கூக்குரல் மாபெரும் மரம் நடு திருவிழாக்களை நடத்திவருகிறது. இவர்கள் மூவரும் ஈஷாவின் பல்வேறு சுற்றுச்சூழல் பணிகளில் ஆரம்பம் முதல் உறுதுணையாக இருந்து வழிகாட்டிகளாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.