பிரதமரின் சூரியோதய திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 27 ஆயிரம் வீடுகளில் சூரிய ஒளி மின் நிலையங்கள்!
பிரதமரின் சூரியோதய திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 27 ஆயிரம் வீடுகளில் சூரிய மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.;

நாடு முழுவதும் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் மின் திட்டங்களுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை எரிசக்தியை ஊக்குவிக்கும் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக காற்றாலை சூரிய ஒளி திட்டங்கள் என செயல்படுத்தப்பட்டு வருகின்றன.இந்த சூழலில் நாட்டில் ஒரு கோடி வீடுகளுக்கு மேல் தளத்தில் சூரிய மின் தகடுகள் பொருத்தி 40,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் 'பிரதமரின் சூரியோதய திட்டம்' புதிய மின் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 13-ஆம் தேதி தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வீடுகளுக்கும் 300 யூனிட் வரை மின்சாரம் வழங்கப்படும். தமிழகத்தில் ஆண்டுதோறும் மின்சார தேவை அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு பிரதமரின் சூரியோதய திட்டத்தில் பயனாளிகளை சேர்க்கும் வகையில் தமிழ்நாடு மின்சார வாரியம் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் வீடுகளில் சூரிய ஒளி மின் நிலையம் அமைப்பதற்கான மொத்த தொகையில் ஒரு கிலோ வாட் மின் திறன் நிலையம் அமைக்க ரூபாய் 30,000-மும் இரண்டு கிலோ வாட் மின் திறன் நிலையம் அமைக்க ரூபாய் 60000-மும் 3 கிலோ வாட் மற்றும் அதற்கு மேல் ரூபாய் 78000-மும் மத்திய அரசின் சார்பில் மானியமாக வழங்கப்படுகிறது.
அதே போல் தற்போது நகர்புறங்களில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பயனாளிகளின் வசதிக்காக அனைவரும் பயன்படுத்தும் மின்விளக்குகள் மோட்டார்கள் உட்பட பொது பயன்பாட்டுக்காக சூரிய ஒளி மின் திட்டத்தில் ஒரு கிலோ வாட் மின் திறனுக்கு ரூபாய் 18000 வரையில் மானியம் வழங்கப்படுகிறது. பிரதமரின் சூரிய உதய திட்டத்திற்கு நாடு முழுவதும் 10 லட்சம் வீடுகளில் கடந்த பத்தாம் தேதி நிலவரப்படி சூரிய ஒளி மின் நிலையம் அமைக்கப்பட்டிருப்பதாக மத்திய மந்திரி பிரகாஷ் ஜோஷி தெரிவித்திருக்கிறார். தமிழகத்தில் தற்போது 22,000 வீடுகளில் சூரிய ஒளி மின் நிலையம் அமைக்கப்பட்டு அவை பயன்பாட்டில் இருப்பதாகவும் 5 ஆயிரம் வீடுகளில் சூரிய ஒளி மின் நிலையம் அமைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கி இருப்பதாகவும் தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர் .பசுமை எரிசக்தியை ஊக்குவிக்கும் வகையில் பொதுமக்கள் இந்த திட்டத்திற்கு பயன்பெற www.pmsuryaghar.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. மத்திய எரிசக்தி துறை வருகிற அக்டோபர் மாதத்திற்குள் நாடு முழுவதும் 20 லட்சம் வீடுகளுக்கு சூரிய ஒளி மின் நிலையம் அமைக்க இலக்கு நிர்ணயத்துள்ளது குறிப்பிடத்தக்கது.