ஆண்டுக்கு ரூபாய் 500 கோடி வருவாய் ஈட்டும் திருப்பதி லட்டு தோற்றமும் வரலாறும்- சிறிய தொகுப்பு!
300 ஆண்டுகளாக திருப்பதி ஏழுமலையானுக்கு படைக்கப்படும் பிரசாதம் ஆண்டுக்கு ரூபாய் 500 கோடி வருவாய் ஈட்டும் திருப்பதி லட்டு பேசு பொருளாகியுள்ளது.
தனித்துவமான சுவையால் அனைவராலும் கொண்டாடப்படும் திருப்பதி லட்டு தற்போது பேசு பொருளாகியுள்ளது. 300 ஆண்டுகள் வரலாறு கொண்ட திருப்பதி லலட்டு இன்று கடந்து வந்த பாதை சுவாரசியமானது .அது பற்றி சிறிய தொகுப்பை இங்கே காணலாம்.
திருப்பதி கோவில் கட்டப்பட்ட காலத்தில் இருந்து பக்தர்களுக்கு பலவிதமான பிரசாதங்கள் வழங்கப்பட்டு வந்துள்ளன. பொங்கல் சுழியம், அப்பம் ,முழு கருப்பு உளுந்து வடை, அதிரசம் ,மனோகரம் என ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு பிரசாதம் வழங்கப்பட்டதாக கல்வெட்டுகள் கூறுகின்றன. 1715 ஆம் ஆண்டு ஆகஸ்ட் இரண்டாம் தேதி முதல் முறையாக திருப்பதி ஏழுமலையானுக்கு லட்டு பிரசாதமாக படைக்கப்பட்டதாக தெரிகிறது .ஆனால் அது பக்தர்களுக்கு வினியோகிக்கப்படவில்லை.
1803-ஆம் ஆண்டு முதல் முழு லட்டு உடைக்கப்பட்டு பூந்தியாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டதாகவும் ஜமீன்தார்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுக்கு மட்டும் முழு லட்டு வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பின்னர் 1943 ஆம் ஆண்டு முதல் சனிக்கிழமை தோறும் சிறிய அளவு லட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. பிறகு தினமும் வழங்கும் முறை உருவானது. இன்னும் சிறிய அளவு லட்டு இலவச பிரசாதமாகவும் பெரிய அளவு லட்டு விலைக்கும் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு லட்டு 50 பைசாவுக்கு விற்கத் தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை அதன் சுவையும் மணமும் மாறாமல் வருவதே திருப்பதி லட்டின் சிறப்பு.
திருப்பதி லட்டின் செய்முறை அதன் வரலாற்றில் ஆறு முறை மட்டுமே மாற்றப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் லட்டு நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக கடலை மாவு மற்றும் வெல்லப்பாகு கொண்டு உருவாக்கப்பட்டது. பின்னர் முந்திரி, உலர் திராட்சை ,ஏலக்காய் ஆகியவை சுவை மற்றும் ஊட்டச்சத்துக்காக சேர்க்கப்பட்டன. அதிநவீன உணவு பரிசோதனை ஆய்வகம் ஒவ்வொரு தொகுதி லட்டுகளின் தரத்தையும் உறுதி செய்கிறது .
அதில் துல்லியமான அளவு முந்திரி, சர்க்கரை மற்றும் ஏலக்காய் இருக்க வேண்டும். மேலும் சரியாக 175 கிராம் எடையுடன் இருக்க வேண்டும். தற்போது திருப்பதியில் நாள் ஒன்றுக்கு மூன்று லட்சத்திற்கும் அதிகமான லட்டுகள் தயாரிக்கப்படுகின்றன .லட்டு விற்பனையின் மூலம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஆண்டுதோறும் ரூபாய் 500 கோடி வருவாய் கிடைக்கிறது.