“இந்தியா குறித்த புதிய பார்வையை கொடுக்கிறது ஈஷா யோக மையம்” - G20 பிரதிநிதிகள் புகழாரம்
“அறிவியல் வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டை உருவாக்கும் நம் உறுதியில், அனைவரையும் இணைத்து கொள்ளும் மனிதர்களும், நம்மை நாம் ஆனந்தமாக வைத்து கொள்வதும் முக்கிய படியாகும்” என ஈஷாவில் நடைபெற்ற G20 - S20 மாநாட்டில் சத்குரு கூறினார்.
https://twitter.com/SadhguruJV/status/1682635547473494016
இந்தியாவில் நடைபெற்று வரும் G-20 மாநாட்டின் ஒரு அங்கமாக, கோவை ஈஷா யோகா மையத்தில் S-20 என்ற பெயரில் 100-க்கு மேற்பட்ட சர்வதேச பிரதிநிதிகள் பங்கேற்ற அறிவியல் மாநாடு நேற்றும், இன்றும் நடைபெற்றது. இதில் 20 நாடுகளில் இருந்து விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், வல்லுநர்கள் மற்றும் சட்டம் இயற்றும் திறன் படைத்தவர்கள் என பல தரப்பினர் கலந்து கொண்டனர்.
அவர்கள் சத்குருவுடன் கலந்துரையாடும் சிறப்பு அமர்வும் நடைபெற்றது. இந்த அமர்வில் நல்வாழ்விற்கான உள்நிலை தொழில்நுட்பங்களை சத்குரு அவர்கள் பகிர்ந்து கொண்டார்.
2 நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில் ‘தி ராயல் சொசைட்டி - இங்கிலாந்து’, ‘தேசிய அறிவியல் அகாடமி - அமெரிக்கா’, ‘சர்வதேச அறிவியல் கவுன்சில் - பிரான்ஸ், ‘ஐரோப்பிய அணுசக்தி ஆராய்ச்சி நிலையம் - ஸ்விட்சர்லாந்து’, ‘இந்திய தேசிய அறிவியல் அகாடமி’ உள்ளிட்ட உலகின் மிக முக்கியமான அறிவியல் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அவர்கள் பசுமையான எதிர்காலத்திற்கான தூய எரிசக்தி, முழுமையான ஆரோக்கியம், சமூகம் மற்றும் கலாச்சாரத்துடன் அறிவியல் இணைப்பது ஆகிய மூன்று தலைப்புகளில் கலந்துரையாடல்கள் நிகழ்த்தினர்.
இக்கூட்டத்தில் பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு உறுப்பினர் திரு. சஞ்சீவ் சன்யால் அவர்களும் பங்கேற்றார். அவர் ஆன்மீக மையத்தில் அறிவியல் மாநாடு நடத்துவது பற்றிய தனது கருத்தை கூறும் போது, “சுவாரஸ்மற்ற பழைய முறையிலான வரட்டுதனமான அறிவியலுக்கு ஒரு குறிப்பிட்ட எல்லை இருக்கிறது என்பதை தற்போது பலர் உணர்ந்து கொண்டுள்ளனர். பொதுவாக, வாழ்க்கையை அறிவியலை அணுகுவது போன்ற குறுகிய கண்ணோட்டத்துடன் புரிந்து கொள்ள முடியாது. வாழ்க்கையை புரிந்துகொள்ள அதிக விசாலமான பார்வை தேவை. அத்தகைய பார்வையை கொண்டுள்ள ஈஷா யோக மையத்தில் இந்த மாநாடு நடத்தப்படுவது சிறப்பானது” என கூறினார்.