மோடி ஆட்சியில் 10 லட்சம் கோடி வாராக் கடன் மீட்பு- நிர்மலா சீதாராமன்!
வங்கித் துறையில் மோடி அரசின் சாதனையால் 10 லட்சம் கோடி வாராக் கடன் மீட்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.;
வங்கித்துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை பிரதமர் மோடி தலைமையிலான அரசு மேற்கொண்டதன் விளைவாக ரூபாய் 10 லட்சம் கோடி மதிப்பிலான வாராக் கடன் தொகை திரும்ப வசூலிக்கப்பட்டுள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில் வங்கி முறைகேடுகள் தொடர்புடைய 1,105 வழக்குகளை அமலாக்கத்துறை விசாரித்தது.
அது தொடர்புடைய 64,920 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இணைக்கப்பட்டுள்ளன. 2023 டிசம்பர் வரை ரூபாய் 15,183 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பொதுத்துறை வங்கிகளில் மறு சீரமைக்கப்பட்டுள்ளன. கடந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் வங்கித்துறையில் நிகழ்ந்த நிர்வாக சீர்கேடுகளை சரிசெய்து சிறப்பான சீர்திருத்தங்களை மோடி அரசு கொண்டு வந்தது. அதன் விளைவாக கடந்த 10 ஆண்டுகளில் ரூபாய் 10 லட்சம் கோடி மதிப்பிலான வாராக் கடன் தொகை திரும்ப வசூலிக்கப்பட்டுள்ளது.
உண்மையில் இந்திய வங்கித்துறை ரூபாய் மூன்று லட்சம் கோடி வருவாயை ஈட்டி வரலாற்று சாதனை படைத்தது. ஆனால் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் வாராக்கடன்கள் அதிகரித்துக் கொண்டே சென்றன. அதில் என்னென்ன ஊழல்கள் நடைபெற்றன .அதேபோல சிறப்பான தொழில் முனைவோருக்கு பதிலாக அரசியல் பின்புலம் கொண்டவர்களுக்கு மட்டுமே வங்கிகளில் கடன் வழங்கப்பட்டது. அரசியல் அழுத்ததால் தகுதியற்ற நபர்களுக்கு முறையான நெறிமுறைகளை பின்பற்றாமல் கடன் வழங்கும் சூழலுக்கு வங்கிகள் தள்ளப்பட்டன. வாரிசு அரசியலைப் பின்பற்றும் காங்கிரஸ் கூட்டணி தங்களின் குடும்ப நலனுக்காக வங்கிகளைப் பயன்படுத்தினர்.
தற்போதுள்ள மோடி அரசு மக்களின் நலனில் கவனம் செலுத்தி வருகிறது. வங்கிகளை தேசிய மயமாக்கியதைத் தவிர வேறு மிகப்பெரும் வங்கி சீர்திருத்தங்களை முந்தைய காங்கிரஸ் மேற்கொள்ளவில்லை. அதனால் வசதி படைத்தவர்கள் நகரத்தில் வசிப்பவர் மட்டுமே வங்கிகளில் கடன் பெற்று வந்தனர். அரசியல் தலையீடு இன்றி சுதந்திரமாகவும் வெளிப்படை தன்மையுடனும் செயல்படும் வகையில் மோடி அரசு சீர்திருத்தங்களை மேற்கொண்டது. இதனால் கிராமங்களில் வசிக்கின்ற ஏழை மக்களும் பயனடைந்துள்ளனர் என குறிப்பிட்டார்.
SOURCE:Newspaper