சீனாவின் நடவடிக்கைக்கு பதிலடி.! வலிமை பெறும் இந்திய கடற்படை - 17,000 கோடி ரூபாய் செலவில் உருபெறும் மாபெரும் திட்டம்.!

சீனாவின் நடவடிக்கைக்கு பதிலடி.! வலிமை பெறும் இந்திய கடற்படை - 17,000 கோடி ரூபாய் செலவில் உருபெறும் மாபெரும் திட்டம்.!

Update: 2019-07-25 14:05 GMT

இந்திய கடற்படைக்கு அமெரிக்காவிடம் இருந்து 17,000 கோடி ரூபாய் செலவில் நவீன ஹெலிகாப்டர்கள் மற்றும் ஆயுதங்கள் வாங்க உள்ளதாக கடற்படை தளபதி கூறியுள்ளார். சீன கடற்படைக்கு நிகரான வலிமையை பெற மேலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


கப்பல் கட்டும் தொழிலால் நாட்டின் பொருளாதாரத்தை வளர்ப்பது என்ற தலைப்பில் டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் இந்திய கடற்படை தலைமை தளபதி கரம்பீர் சிங் பங்கேற்று பேசினார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்திய கடற்படையை மேலும் வலிமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.


ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா என்ற விமானம் தாங்கி கப்பல் உள்ள நிலையில், கட்டப்பட்டு வரும் புதிய கப்பலான ஐ.என்.எஸ்.விக்ராந்த் அடுத்த ஆண்டு கடற்படையில் இணைக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.


மேலும் 65,000 டன் எடை கொண்ட மற்றொரு பிரமாண்ட விமானம் தாங்கி கப்பலை கட்டும் பணி நடைபெற உள்ளதாக கூறிய அவர், இந்த பணியும் முடிவடைந்தால் இந்த கடற்படையில் விமானம் தாங்கி கப்பல்கள் மூன்று முழு நேரமும் பணியில் இருக்கும் என்றார்.


2012 முதல் 2017 வரையிலான காலகட்டத்தில் சீனாவின் ராணுவ நிதி ஒதுக்கீடு சராசரியாக 9.2 % உயர்ந்துள்ளது குறித்து கேள்விக்கு பதில் அளித்த அவர், சீனாவின் ராணுவ நடவடிக்கைகளை இந்தியா கவனித்து வருகிறது என்றார்.


எந்த ஒரு கால கட்டத்திலும் குறைந்தது பத்து போர்க்கப்பல்கள் அல்லது நீர்மூழ்கிகளை இந்திய பெருங்கடலில் சீனா நிறுத்தி வருவதை அவர் சுட்டிக்காட்டினார். சீன கடற்படைக்கு இணையாக இந்தியா கடற்படையும் தனது வலுவை அதிகரிக்கும் என்ற அவர், இதற்கு தொடர்ந்து கூடுதல் நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்றார்.


கடற்படையை மேலும் வலுவாக்க அமெரிக்காவிடம் இருந்து 17,000 கோடி ரூபாய் செலவில் ஹெலிகாப்டர் மற்றும் ஆயுதங்கள் வாங்கப்பட உள்ளதாக அவர் கூறினார். எம்.ஹெச்.60 ரக பல் திறன் ஹெலிகாப்டர்கள் 24 -யை வாங்க இந்திய கடற்படை திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.


கடற் பருந்து என்று அழைக்கப்படும் அந்த ரக ஹெலிகாப்டர்கள் தாக்குதலுக்கும், படையினரின் போக்குவரத்திற்கும், சரக்கு போக்குவரத்திற்கும் என பன்முக பயன்பாட்டிற்கு உதவும் என்று அவர் குறிப்பிட்டார்.


மேலும் வருகிற 2050 ஆண்டுக்குள் 200 போர்க்கப்பல்கள், 500 விமானங்களை கொண்டதாக இந்திய கடற்படையை உருவாக்க மத்திய அரசு மாபெரும் திட்டம் வகுத்து செயல்படுத்தி வருவதாக கரம்பீர் சிங் தெரிவித்தார். இந்திய கடற்படையில் இப்போது 67,228 வீரர்களும், 137 போர்க்கப்பல்களும், 235 விமானங்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Similar News