திருவண்ணாமலை கார்த்திகை மகா தீப விழாவுக்கு 19 சிறப்பு ரயில்கள் இயக்கும் ரயில்வே நிர்வாகம் - தமிழக அரசு சிறப்பாக நடத்துமா?

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவன்று 2500 பக்தர்களுக்கு மட்டுமே மலையேற அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-11-16 06:45 GMT

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தீப திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தெரிவிக்கப்பட்டதாவது:-


திருவண்ணாமலையை சுற்றிலும் 13 தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ளது. தற்போது 9 ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது கூடுதலாக 19 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது. 2692 சிறப்பு பஸ்கள் 6431 நடை இயக்கப்படும்.கிரிவல பாதையில் 15 மருத்துவ குழுக்களும்,கோவில் வளாகத்தில் மூன்று குழுக்களும் ஏற்படுத்தப்படுகிறது. மேலும் ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் வைக்கப்பட உள்ளன. தீபத்திருவிழாவிற்கு ஒரு ஐ.ஜி தலைமையில் ஐந்து டி.ஐ.ஜி, 20க்கும் மேற்பட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் 1297 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.ஆங்காங்கே 26 தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. 600க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபட உள்ளனர். கோவில்  மாடவீதிகள் மற்றும் கிரிவலப் பாதையில் 500 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன.


மேலும் 7 டிரோன்கள் மூலமும் 58 கண்காணிப்பு கோபுரங்கள் மூலமும் கண்காணிக்கப்பட உள்ளது. மலை மீது ஏறுவதற்கு 2500 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். தீப திருவிழாவின்போது சந்தேக நபர்களின் புகைப்படங்கள் எடுத்து அவர்கள் குற்றவாளிகளா என்பதை முகத்தை வைத்து கண்டறியும் செயலி பயன்படுத்தப்பட உள்ளது. காணாமல் போகும் குழந்தைகளை கண்டுபிடிக்க நகருக்குள் நுழையும் போதே குழந்தைகளின் கையில் முகவரியுடன் கூடிய தகவல் பட்டை கட்டப்படும்.101 இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. 12 பெரிய திரைகளில் கோவில் நிகழ்வுகள் திரையிடப்பட உள்ளது. சமூகவிரோதிகளின் நடமாட்டத்தை தடுக்கும் வகையில் இருசக்கர வாகனத்தில் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர் .


குடிநீர் வசதி, கழிவறை வசதி எங்கெல்லாம் உள்ளது என்பது குறித்து அனைத்து இடங்களிலும் தகவல் பலகை வைக்கப்பட உள்ளது. மலையின் மீது ஏறக்கூடிய 23 வழிகளில் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். கலெக்டர் அலுவலகம் உட்பட நான்கு இடங்களில் முக்கிய கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட உள்ளன .12000க்கும் மேற்பட்ட வாகனங்களை நிறுத்தும் வகையில் இடவசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யாராவது வாகனங்களுக்கு கட்டணம் வசூலித்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 3 ஆயிரம் தூய்மை பணியாளர்கள் பணியில் ஈடுபட உள்ளனர். 158 இடங்களில் குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. துணிப்பை கொண்டு வரும் பக்தர்களுக்கு குலுக்கள் முறையில் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் வழங்கப்படும். சுமார் 1000 கல்லூரி மாணவர்கள் தன்னார்வலர்களாக பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு சுமார் 130 இடங்களில் தங்குவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.





 



 


Similar News