மத வழிபாட்டுத் தலங்கள் சட்டம், 1991ஐ எதிர்த்து வழக்கு - அயோத்திக்கு அடுத்து காசி, மதுரா மீட்கப்படுமா?

மத வழிபாட்டுத் தலங்கள் சட்டம், 1991ஐ எதிர்த்து வழக்கு - அயோத்திக்கு அடுத்து காசி, மதுரா மீட்கப்படுமா?

Update: 2020-06-13 12:04 GMT

வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான 1991ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தின் 4வது பிரிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் 15 ஆகஸ்ட், 1947ல் எவ்வாறு இருந்ததோ அவ்வாறே அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் அதனதன் மதத்தன்மை மாறாமல் பராமரிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது.

பொது நல வழக்கின்‌ வாயிலாக இந்தச்‌ சட்டத்தின் பிரிவு 4ஐ எதிர்த்து பிரச்சினைக்குரிய வழிபாட்டுத் தலங்களை மீட்கும் முயற்சியாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் கோவிலை மசூதியாகவும் மசூதியைக் கோவிலாகவும் மாற்றக் கூடாது என்னும் விதியையும் கொண்டுள்ளது.

எனவே, விஷ்வ பத்ர பூஜாரி புரோஹித மகாசங்கம் என்ற அமைப்பு வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான 1991ல் கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டத்தின் நான்காவது பிரிவு பாராளுமன்றத்தின் அதிகாரத்திற்கு உட்படாது என்றும் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என்றும் உத்தரவிடக்கோரி பொதுநல மனு‌ ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.

"மற்ற மதங்களைப் பின்பற்றுபவர்கள் அவர்களது அதிகாரத்தைக் காட்ட ஆக்கிரமிப்பு செய்த இந்துக்களின் மதச் சொத்துக்களை‌ மீட்க நடவடிக்கை எடுக்க முடியாத வண்ணம் இந்தச் சட்டம் தடை ஏற்படுத்துகிறது. நீதிமன்றத்தின் வாயிலாக சொத்துரிமை பிரச்சனைக்கு தீர்வு காணாமல் இந்தப் பிரிவைக் கொண்டு வந்தது பாராளுமன்றத்தின் அதிகாரத்துக்கு அப்பாற்பட்டது மற்றும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது" என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும், அரசியலமைப்புச் சட்டம் தரும் அடிப்படை மத உரிமையைப் பறிக்கவோ, இந்து சமுதாயம் அதன் வழிபாட்டுத் தலங்களை நீதிமன்றங்கள் வாயிலாக மீட்க முயற்சிப்பதைத் தடுக்கவோ முடியாது என்றும் குறிப்பிடுகிறது. ராம் ஜென்ம பூமி‌ வழக்கில் பிரச்சினைக்குரிய இடத்தில் இருந்தது இந்துக் கோவில் தான். எனவே அந்த இடத்தில் கோவில் கட்டிக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து, பிற மத படையெடுப்பாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு மசூதிகளாக்கப்பட்ட காசி, மதுரா போன்ற பிற கோவில்களையும் மீட்கும் முயற்சியின் முதல் படியாக இந்த வழக்கு பார்க்கப்படுகிறது.

Similar News