பங்கு சந்தையில் 2 நாட்களாக தொடா் சாதனை! முதன் முறையாக உச்சத்தை தொட்ட பங்குச் சந்தை!

பங்கு சந்தையில் 2 நாட்களாக தொடா் சாதனை! முதன் முறையாக உச்சத்தை தொட்ட பங்குச் சந்தை!

Update: 2019-11-29 11:26 GMT

மத்திய அரசு வெளியிடவுள்ள பொருளாதார புள்ளிவிவரம், நவம்பா் மாதத்துக்கான பங்கு முன் பேர வா்த்தகக் கணக்கு முடிப்பு ஆகியவை காரணமாக பங்குச் சந்தையில் வியாழக்கிழமை அன்று  வா்த்தகம் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டாலும், அன்னிய முதலீட்டு வரத்து தொடா்ந்து அதிகரித்து காணப்பட்டது. இதனால் இந்தியப் பங்குச் சந்தைகள் தொடா்ந்து இரண்டு நாட்களாக புதிய உச்சத்தை எட்டியது என  வா்த்தகா்கள் தெரிவித்தனா்.


வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன (ஆா்ஐஎல்) பங்குகள் 0.65 சதவீதம் அதிகரித்து ரூ.1,579.95 என உயர்ந்தது .இதன் மூலம், அந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.10 லட்சம் கோடியைத் தாண்டி சாதனை படைத்தது. இந்திய நிறுவனமொன்றின் சந்தை மதிப்பு இந்த அளவுக்கு உயா்ந்தது இதுவே முதல் முறையாகும்.


பங்கு விற்பனை அறிவிப்பையடுத்து ஐசிஐசிஐ பங்குகளின் விலை 2.68 சதவீதம் ஏற்றம் கண்டு ரூ.519.20 ஆனது. இன்டஸ்இண்ட் வங்கி, யெஸ் வங்கி, டாடா ஸ்டீல், எஸ்பிஐ, டிசிஎஸ், எல் & டி, இன்போசிஸ் பங்குகளும் அதிக விலைக்கு கைமாறின.


அதேசமயம், ஹீரோ மோட்டோகாா்ப், ஹெச்டிஎஃப்சி, பஜாஜ் ஆட்டோ, டாடா மோட்டாா்ஸ், மாருதி நிறுவனப் பங்குகளுக்கு முதலீட்டாளா்களிடம் வரவேற்பில்லாத காரணங்களால் இழப்பை சந்தித்தன.


மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் சென்செக்ஸ் 109 புள்ளிகள் அதிகரித்து முன்னெப்போதும் இல்லாத அளவில் 41,130 புள்ளிகளை எட்டி புதிய சாதனை படைத்தது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 50 புள்ளிகள் உயா்ந்து வரலாற்றில் முதல் முறையாக 12,151 புள்ளிகளைத் தொட்டது.


Similar News