நான்கு மாநிலங்களுக்கு 204 தனிமைப்படுத்தும் ரயில் பெட்டிகளை அனுப்பி வைத்த மத்திய அரசு - தகுந்த நேரத்தில் கை கொடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

நான்கு மாநிலங்களுக்கு 204 தனிமைப்படுத்தும் ரயில் பெட்டிகளை அனுப்பி வைத்த மத்திய அரசு - தகுந்த நேரத்தில் கை கொடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

Update: 2020-06-16 01:46 GMT

இந்திய ரயில்வே நான்கு மாநிலங்களில் 204 பெட்டிகளை தனிமைப்படுத்தும் வார்டுகளாக மாற்றி உபயோகத்துக்கு அளித்துள்ளது. டெல்லியில் இருக்கும் ஷகுர்பஸ்தி பணிமனையில் மட்டும் 54 பெட்டிகள் தயாராக உள்ளன. இது மேலும் அதிகரிக்கப்பட்டு 500 பெட்டிகள் வரை தயார் நிலையில் வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்க படுக்கைகள் பற்றாக்குறையாக இருப்பதால் நிலையை சமாளிக்க 500 ரயில் பெட்டிகள் தரப்படும் என்று அறிவித்தார்.

முன்னதாகவே தனிமைப்படுத்துதலுக்காக ரயில்வே குளிர்சாதன வசதி இல்லாத 5,000 பெட்டிகளை தயார் செய்து வைத்திருந்த நிலையில் இரண்டு மாதங்களுக்கு பிறகு தற்போது உத்திரப் பிரதேசம், தெலங்கானா, ஆந்திர பிரதேசம் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்கள் அவற்றை அனுப்பி வைத்து உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளன.

பண்டிட் வாரணாசி, படோஹி, ஃபைசாபாத், சஹாரன்பூர், மிர்சாபூர், ஜான்சி மற்றும் தீனதயாள் உபாத்யாயா சந்திப்புகளில் 10 பெட்டிகள் வீதம் 70 பெட்டிகள் உத்திரப் பிரதேசத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. டெல்லி ஷகுர்பஸ்தி பணிமனையில் 54 பெட்டிகள் தயாராக உள்ளன.

தெலங்கானாவில் செகந்திராபாத், கச்சேகுடா மற்றும் அடில்லாபாத் ரயில் நிலையங்களில் 20 பெட்டிகள் வீதம் 60 ரயில் பெட்டிகளும், ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் 20 பெட்டிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தைக் கடந்துவிட்ட நிலையில் உபி 24 இடங்களுக்கு 240 ரயில் பெட்டிகளும், தெலங்கானா 3 இடங்களுக்கு 60 பெட்டிகளும், டெல்லி 10 பெட்டிகளும் கோரி வேண்டுகோள் விடுத்திருந்தன.

டெல்லிக்கு முதல் தொகுதியில் 160 படுக்கை வசதி கொண்ட 10 பெட்டிகள் தரப்பட்ட நிலையில் தற்போது மேலும் 44 பெட்டிகள் தயார் நிலையில் ஷகுர்பஸ்தி நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளன.

நிடி ஆயோக் மற்றும் மத்திய சுகாதாரத்துறை இணைந்து தயாரித்துள்ள ஒருங்கிணைந்த COVID திட்டத்தின் படி படுக்கை வசதிக்கு பற்றாக்குறை ஏற்படும் இடங்களில் சந்தேகத்திற்குரிய மற்றும் உறுதி செய்யப்பட்ட தொற்று பாதிப்பு உள்ளவர்களைத் தனிமைப்படுத்த இந்த ரயில் பெட்டிகளை மாநில அரசுகள் உபயோகிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த ரயில் பெட்டிகளில் மருத்துவ சிகிச்சைக்கு தேவையான ஆக்ஸிஜன் உருளைகள், போர்வைகள், மருந்துப் பொருட்கள், சுத்திகரிக்கப்பட்ட பெர்த்துகள் ஆகியவை இருக்கும். சுகாதாரத் துறையின் அறிவுறுத்தலின் படி இந்த பெட்டிகள் லேசான‌ அறிகுறிகள் உள்ளவர்களைத் தனிமைப்படுத்த பயன்படுத்தப்படலாம்.

9,195 உயிரிழப்புகளுடன் இறப்பு விகிதத்தில் ஒன்பதாம் இடம் வகிக்கும் இந்தியா 3.20 லட்சம் பேருக்கும் மேல் பாதிக்கப்பட்ட நிலையில் இந்த வகையில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. சுகாதாரத் துறை தரவுகளின் படி 24 மணி நேரத்தில் 311 பேர் உயிரிழந்ததாகவும், 1,62,379 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் அந்த விகிதம் 50%ஐ விட அதிகரித்துள்ளதாகவும், 1,49,348 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது நாளாக ஒரே நாளில் தொற்று ஏற்பட்டோர் எண்ணிக்கை 10,000க்கும்‌ மேல் சென்றது குறிப்பிடத்தக்கது.

கொசு வலைகள், ஃபோன் மற்றும் லேப்டாப்களுக்கான சார்ஜிங் பாய்ண்டுகள் மற்றும் குளியலறைகளாக மாற்றப்பட்ட கழிவறைகள் என அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியதாக இந்த தனிமை வார்டுகளாக மாற்றப்பட்ட ரயில் பெட்டிகள் இருக்கும் என ரயில்வே அமைச்சகம் கூறியுள்ளது. ஏப்ரல் 11லேயே பல பெட்டிகள்‌ தயார் செய்யப்பட்டு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட தயாராக இருந்ததாகவும் இதற்காக ஒவ்வோரு ரயில் பெட்டிக்கும் ₹ 2 லட்சம் செலவானதாகவும் ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நன்றி : DDNews

Similar News