தாவூத் பற்றி தகவல் கொடுத்தால் சன்மானம் - தேடுதலை தீவிரப்படுத்தும் தேசிய புலனாய்வு முகமை

மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளியான தாவூத் இப்ராகிம் குறித்த தகவல் கொடுத்தால் 25 லட்சம் சன்மானம் வழங்கப்படும்- தேசிய புலனாய்வு முகமை அறிவிப்பு

Update: 2022-09-02 07:15 GMT

மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளியான நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் குறித்த தகவல் கொடுத்தால் 25 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என தேசிய புலனாய்வு முகமை அறிவித்துள்ளது.

மும்பையில் 1993ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் சுமார் 250 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர் .1400 பேர் படுகாயமடைந்னர்.இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்ட நிழல் உலக தாதாவும் பயங்கரவாதியுமான தாவூத் இப்ராகிம் தற்போது பாகிஸ்தானில் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது.இவர் டி-கம்பெனி என்ற பெயரில் சர்வதேச அளவிலும் பயங்கரவாத குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.

தாவுத் இப்ராஹிம் அவரது நெருங்கிய கூட்டாளிகளான அனீஸ் இப்ராஹிம் சேக், சோட்டா சகீல்,ஜாவித் சிக்னா, டைகர் மேமன் உள்ளிட்டவர்களை வைத்து அவரது டி-கம்பெனியை இயக்கி வருகிறார்.

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் தேசிய புலனாய்வு முகமை கம்பெனி டி-கம்பெனி மீது வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை விடுத்துள்ள செய்தி குறிப்பில் "தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது கூட்டாளிகள் ஆயுத கடத்தல், பயங்கரவாதம், சட்டவிரோத பணபரிமாற்றம், அதற்கு நிதி திரட்டுதல், லஷ்கர் -இ- தொய்பா, ஜெய்ஷ்- இ -முகமது, அல்கொய்தா போன்ற பயங்கரவாத கும்பலுடன் இணைந்து செயல்படுதல் போன்ற பயங்கரவாத செயலில் ஈடுபட்டு வருகின்றனர் என கூறப்பட்டுள்ளது.

மேலும் தாவூத் இப்ராகிமை கைது செய்யும் வகையில் அவர் குறித்த தகவல் கொடுப்பவர்களுக்கு 25 லட்சம் சன்மானம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

இதேபோல் தாவூத் இப்ராகிமின் கூட்டாளிகளான சோட்டா சகீல் குறித்து தகவல் கொடுத்தால் 20 லட்சமும், அனீஸ் இப்ராகிம் சேக்,ஜாவித் சிக்னா, டைகர் மேமன் குறித்து தகவல் கொடுத்தால் தலா 15 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது.





 


Similar News