தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ₹ 901.75 கோடி நிதி விடுவிப்பு - தாமதமானால் வட்டியுடன் செலுத்த உத்தரவு.!

தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ₹ 901.75 கோடி நிதி விடுவிப்பு - தாமதமானால் வட்டியுடன் செலுத்த உத்தரவு.!

Update: 2020-07-16 08:18 GMT

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுபடுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் தொழில்களும் வணிகமும் பாதிக்கப்பட்டது மட்டுமன்றி வரி வருவாய் மற்றும் பிற இதர வருவாய் வழிகள் தடைபட்டதால் மாநில அரசுகளும் நிதியின்றி அவதிக்கு உள்ளாகி வருகின்றன. எனவே மாநில அரசுகளுக்கு உதவும் வகையில் பல்வேறு அமைச்சகங்களுக்கு கீழ் வரும் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதியை கூடுமானவரை விரைவாக விடுவித்து மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்புகளை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக தற்போது ஜல்சக்தி அமைச்சகத்தின் கீழ் பதினைந்தாவது நிதிக்குழு மற்றும் ஜல் சக்தி துறையின் பரிந்துரையின் பேரில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு சேரவேண்டிய 2020-2021 நிதியாண்டுக்கான மானியத் தொகையின் முதல் தவணையாக ₹ 15,187.5 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ₹ 901.75 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிவிட்ட ட்வீட்டில் கொரோனா‌ வைரஸ் தொற்றை எதிர்கொள்ள ‌எடுக்கப்படும்‌ நடவடிக்கைகளுக்கும் பொருளாதார நடவடிக்கைகளை மீட்டெடுக்கவும் இந்த நிதி உதவிகரமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிதி அடுத்த 10 வேலை நாட்களுக்குள் அந்தந்த மாநில நிதி அமைச்சகங்களால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு விடுவிக்கப்படும் என்றும் தாமதமாகும் பட்சத்தில் வட்டியுடன் சேர்த்து நிதி வழங்கப்படும் என்றும் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த நிதி தூய்மை பணிகள், திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத பகுதி என்ற நிலையை தக்கவைத்தல், குடிநீர் விநியோகம் மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர் மறுசுழற்சி ஆகிய அடிப்படை பணிகளுக்கு பயன்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

Similar News