வீரமங்கை வேலுநாச்சியார் உருவத்துடன் டெல்லியில் பார்வையாளர்களை கவர்ந்த தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி

டெல்லியில் கடந்தாண்டு நடந்த குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்திக்கு அனுமதி கிடைக்காமல் போய்விட்டது. இந்த ஆண்டு அந்த நிலை மாறி இருக்கிறது.

Update: 2023-01-27 07:15 GMT

தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி குடியரசு தின அணிவகுப்பில் தனி இடம் பிடித்தது. இந்த ஊர்தி தமிழ்நாட்டில் பெண்கள் முன்னேற்றம் மற்றும் கலாச்சாரம் என்னும் கருப்பொருளைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்தது. சென்னைக்கு பெருமை சேர்ப்பதாக அமைந்தது.


இந்த அலங்கார ஊர்தியில் ஆங்கிலேயருக்கு எதிராக முதன் முதலாக போர்க்கொடி உயர்த்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை வீரமங்கை வேலுநாச்சியார் குதிரைகள் சவாரி செய்யும் காட்சியும் ,ஆத்திச்சூடி தந்த அவ்வையார், நாட்டின் முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, சமூக சீர்திருத்தவாதி மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் ஆகியோரின் உருவங்களும் இடம்பெற்று இருந்தன.


நூறு வயது கடந்து விவசாயத்தில் சாதனை படைத்துவரும் பாப்பம்மாள், பரதநாட்டிய கலைஞர் பால சரஸ்வதி ஆகியோரின் உருவங்களும் அங்கம் வகித்தன. அலங்கார ஊர்தியின் பின்புறம் யுனெஸ்கோவினால் உலக பாரம்பரிய தலமாக அறிவிக்கப்பட்டுள்ள சோழ மன்னன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோவிலின் மாதிரியும் அமைக்கப்பட்டிருந்தது. அணிவகுப்பில் பங்கேற்றவர்கள் தமிழ்நாட்டின் பாரம்பரிய நாட்டுப்புறக் கலையான கரகாட்டம் ஆடிச் சென்றனர். கரகாட்டத்துக்கு பக்கபலமாக கொம்பு, நாதஸ்வரம், தவில் இசை அமைந்தது.



 


Similar News