ஈஷா நடத்திய மாபெரும் இலவச மருத்துவ முகாம் - நூற்றுக்கணக்கான கிராம மக்கள் பயன்பெற்றனர்
ஈஷா சார்பில் கோவையில் நடைபெற்ற 2 நாள் இலவச பல்துறை மருத்துவ முகாமில் பழங்குடி மக்கள் உட்பட 600-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்று பயன்பெற்றனர்.
ஈஷா சார்பில் கோவையில் நடைபெற்ற 2 நாள் இலவச பல்துறை மருத்துவ முகாமில் பழங்குடி மக்கள் உட்பட 600-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்று பயன்பெற்றனர்.
கிராமப்புற ஏழை மக்களுக்கு தரமான மருத்துவ சேவை அளிக்கும் நோக்கத்தில் ஈஷா கிராமப் புத்துணர்வு இயக்கத்தின் ஆரோக்கிய அலை அமைப்பானது, முன்னணி மருத்துவமனைகளுடன் இணைந்து பல்வேறு விதமான இலவச மருத்துவ முகாம்களை கோவை மாவட்டத்தில் தொடர்ந்து நடத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, டிசம்பர் 4-ம் தேதி மத்வராயபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியிலும், டிசம்பர் 5-ம் தேதி ஆலாந்துறையில் உள்ள ஈஷா கிராம மருத்துவமனையிலும் பல்துறை இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் ஆலாந்துறை, செம்மேடு, இருட்டுப்பள்ளம், மடக்காடு, தொண்டாமுத்தூர், பூலுவப்பட்டி, தொம்பிலிபாளையம் உட்பட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று இலவச மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர். இருதயம், கண், காது, மூக்கு, தொண்டை, எழும்பு, தோல், பல், நரம்பு, பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவம் என ஒவ்வொரு பிரச்சினைகளுக்கும் சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்று மருத்துவ ஆலோசனைகள் வழங்கினர்.
குறிப்பாக, கண் புரை பாதிப்பு கண்டறியப்பட்ட 43 நோயாளிகளுக்கு அரவிந்த் கண் மருத்துவமனையில் கண் புரை நீக்க அறுவை சிகிச்சை இலவசமாக செய்யப்பட்டது. மேலும், முகாமின் சிறப்பம்சமாக, இருதய நோயாளிகளுக்கான 'எக்கோ' பரிசோதனை, மகளிருக்கான கர்ப்பப்பை பரிசோதனை, மார்பக புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை, காது கேட்கும் திறனுக்கான பரிசோதனைகளை பொதுமக்கள் இலவசமாக செய்து கொண்டனர். இதுதவிர அனைத்து மருந்துகளும் இலவசமாக வழங்கப்பட்டன.
இந்த 2 நாள் மருத்துவ முகாம் கோவை அரவிந்த் கண் மருத்துவமனை, வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனம், கங்கா மருத்துவமனை, கோவை ரோட்டரி மெட்ரோபொலிஸ் சங்கம் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து நடத்தப்பட்டது.