மத்தியில் ஹாட்ரிக் வெற்றி நிச்சயம்- பிரதமர் மோடி!

பா.ஐனதா பெற்றிருக்கும் ஹாட்ரிக் மாநில வெற்றி, மத்தியில் 2024 ஆம் ஆண்டு ஹாட்ரிக் வெற்றி பெறுவதற்கான உத்தரவாதத்தை அளித்திருப்பதாக பிரதமர் மோடி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Update: 2023-12-04 05:15 GMT

சட்டசபை தேர்தல் நடைபெற்ற மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்காரில் பா.ஜ.க முழு வெற்றி பெற்றுள்ளது. இதனால் நாடு முழுவதும் கட்சியினர் இடையே பெரும் மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடுகிறது. இந்த தேர்தல் வெற்றியை தொடர்ந்து டெல்லி பா.ஜனதா தலைமை அலுவலகத்திற்கு பிரதமர் மோடி நேற்று மாலையில் வருகை தந்தார். அப்போது அங்கே கூடி இருந்த ஏராளமான தொண்டர்கள் அவரை உற்சாகத்துடன் வரவேற்றனர். அவர்களது வரவேற்பை ஏற்றுக்கொண்ட பிரதமர் அங்கே உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-


சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க பெற்றுள்ள இந்த மாபெரும் வெற்றி தற்சார்பு இந்தியா என்ற எங்கள் அரசின் செயல் திட்டத்திற்கு கிடைத்த வெற்றி ஆகும். இந்த மூன்று மாநில வெற்றி 2024 ஆம் ஆண்டு  மத்தியில் நாம் ஹாட்ரிக் வெற்றி பெறுவதற்கு உத்தரவாதம் அளித்து இருக்கிறது. ஊழலுக்கு எதிரான நமது போருக்கு மக்கள் ஆதரவு வழங்கியிருப்பதை இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. அத்துடன் காங்கிரசுக்கும் இந்தியா கூட்டணியினருக்கும் ஒரு பாடத்தை மக்கள் புகட்டி இருக்கின்றனர். அதாவது குடும்பத்தினருடன் மேடையில் கூடுவது ஒரு நல்ல புகைப்படத்தை உருவாக்கலாம் ஆனால் மக்களின் நம்பிக்கை வெல்ல முடியாது என்பதே அது.


ஊழலில் திளைத்து வரும் இந்த கட்சிகள் தங்கள் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் அல்லது மக்கள் அவர்களை முடித்துவிடுவார்கள் என எச்சரிக்கை வழங்கி இருக்கின்றனர். மத்திய அரசின் வளர்ச்சி திட்டங்களுக்கும் மக்களுக்கும் இடையே யாரும் வரக்கூடாது. மீறினால் மக்கள் அவர்களை அகற்றி விடுவார்கள். பலமான பெரும்பான்மை அனுபவிக்கும் நிலையான அரசுக்கு மக்கள் வாக்களிப்பது உலகமே உற்று நோக்குகிறது. சுயநல அரசியலையும் தேச நலம் சார்ந்த அரசியலையும் மக்களால் வேறுபடுத்தி பார்க்க முடியும்.


நாட்டின் வளர்ச்சிக்கும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் வலுவான பா.ஜனதா வழிவகுக்கும் என்பதை அவர்கள் உணர்ந்து உள்ளனர். பெண்கள், இளைஞர்கள் , ஏழைகள் மற்றும் விவசாயிகள் ஆகியோர்தான் நான்கு பெரிய சாதிகள். அவர்கள் அதிகாரம் பெறுவது நாடு அதிகாரம் பெற வழிவகுக்கும் . இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.


SOURCE :DAILY THANTHI

Similar News