மின்சாரமில்லாமல் வேலை செய்யும் துணி துவைக்கும் எந்திரம்
உலகம் முழுவதும் உள்ள குறைந்த வருவாய் பிரிவினர் பயனடையும் வகையில் குறைந்த விலையிலான சலவை இயந்திரத்தை கண்டுபிடித்து இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் பாயிண்ட்ஸ் ஆப் லைட் விருதை வென்றுள்ளார் லண்டனில் வாழும் சீக்கியரான நவ்ஜோத் ஷாவ்னி.
லண்டனில் வாழும் சீக்கியரான நவ்ஜோத் ஷாவ்னி கடந்த இரண்டு வருடங்களாக இந்த புதுமை சலவை இயந்திர தயாரிப்பில் மும்முரம் காட்டி இருந்தார் . அவர் தயாரித்த துணி துவைக்கும் எந்திரத்துக்கு மின்சாரம் தேவையில்லை. கையாலேயே இயக்கும் வகையில் உருவாக்கி இருந்தார். கேன் வடிவில் இருக்கும் அமைப்பில் துணிகளை உள்ளிட்டு கைகளால் சுழற்ற வேண்டும் . அப்படி குறிப்பிட்ட காலத்திற்கு சுழற்றும்போது சுத்தமான ஆடைகளைப் பெற முடியும்.
கடந்த ஆண்டு ஆப்பிரிக்கா கண்டத்தின் பல ஏழ்மை நாடுகளுக்கு இந்த துணி துவைக்கும் இயந்திரத்தை இலவசமாக வழங்கியிருந்தார். இவரது சேவைக்கு தான் இங்கிலாந்து பிரதமரின் பாராட்டுகளும் சிறப்பு விருதும் வழங்கப்பட்டிருக்கிறது. நவ்ஜோத் ஷாவ்னியின் கண்டுபிடிப்பானது கடந்த வருடமே செயல்பாட்டுக்கு வந்துவிட்டது. இது குறித்த திட்ட அறிக்கையை உலக அரங்கில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பே நவ்ஜோத் சமர்ப்பித்தார். அதற்கான அங்கீகாரம் இப்போது கிடைத்திருக்கிறது.
தனக்கு விருது கிடைத்தது குறித்து அவர் கூறும்போது "உலகெங்கிலும் மின்சார சலவை இயந்திரம் அல்லாத ஆயிரக்கணக்கான மக்களுக்கு உதவ பொறியாளரான நீங்கள் உங்கள் தொழில்முறை திறனை பயன்படுத்தி உள்ளீர்கள். உங்களின் புதுமையான இந்த இயந்திரம் மூலம் பலரது நேரம் மிச்சமாகிறது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பின் தங்கிய பல பெண்களுக்கு உங்கள் கண்டுபிடிப்பு அதிகாரம் அளிக்கிறது. உங்கள் இயந்திரங்கள் தற்போது மனிதாபிமான உதவி மையங்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு உதவுகின்றன என்பதை நான் அறிவேன். உங்கள் இரக்கம் மற்றும் மற்றவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான அர்ப்பணிப்பு ஆகியவை எங்கள் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது" என்று பிரதமர் சுனக் குறிப்பிட்டு இருப்பதை சுட்டிக்காட்டினார்.
பாயிண்ட்ஸ் ஆப் லைட் விருதை வெல்வதும் பிரதமரால் அங்கீகரிக்கப்படுவதும் எனக்கு கிடைத்த பாக்கியம். பெண்கள் மற்றும் குழந்தைகளின் சுமையை குறிப்பதே இந்த இயந்திரத்தை கண்டுபிடித்ததற்கு காரணம் உதவியாக இருப்பதை நினைத்தும் அதற்குரிய அங்கீகாரம் கிடைப்பது நினைத்து பெருமைப்படுகிறேன் என்றார்.