சிறுதானிய உற்பத்தியை பெருக்க விரைந்து செயல்படுங்கள்-விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு

சிறுதானிய உற்பத்தியை பெருக்குவதற்கு விரைந்து செயல்படுமாறு விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

Update: 2023-03-19 03:30 GMT

நடப்பு 2023-ஆம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐ.நா சபை அறிவித்தது. இதற்கு இந்தியா தான்  முன்மொழிந்தது. இந்த நிலையில் டெல்லியில் நேற்று உலக சிறுதானிய மாநாடு நடந்தது. இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்து பேசினார் .அப்போது அவர் கூறியதாவது:-


நமது இந்திய நாட்டின் முன்மொழிதலாலும் முயற்சிகளாலும் இந்த ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐ.நா சபை பிரகடனம் செய்திருக்கிறது .இது நமது நாட்டுக்கு கிடைத்துள்ள பெருமையாகும். சிறுதானியங்களை ஒரு உலகளாவிய இயக்கமாக மேம்படுத்துவதற்கு இந்தியா தொடர்ந்து செயலாற்றி வருகிறது. சிறுதானியப் பயிர்கள் பாதகமான காலநிலை சூழல்களிலும் எளிதாக வளரக்கூடியவை ஆகும். அவற்றுக்கு ரசாயனங்களை உறவுகளோ தேவையில்லை. இந்தியாவின் சிறுதானிய திட்டம் நாட்டில் இரண்டரை கோடி சிறிய விளிம்பு நிலை விவசாயிகளுக்கு நன்மை பயக்கும்.


இன்றைக்கு சிறுதானியங்கள் தேசிய உணவு தானிய தொகுப்பில் ஐந்து முதல் ஆறு சதவீத பங்களிப்பை செய்கின்றன. இந்த பங்களிப்பை அதிகரிப்பதற்கு விரைந்து செயல்பட வேண்டும் என்று நான் இந்திய விஞ்ஞானிகளையும் விவசாய நிபுணர்களையும் கேட்டுக்கொள்கிறேன். இதற்காக நாம் அடையக்கூடிய இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும். உணவு பதப்படுத்தும் துறையில் உற்பத்தியுடன் இணைந்த ஊக்க தொகை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கி இருக்கிறது. இந்த திட்டத்தை சாதகமாக எடுத்துக்கொண்டு சிறுதானியங்கள் அடிப்படையிலான தயாரிப்புகள் உற்பத்தியை பெருக்க வேண்டும்.


உணவு பாதுகாப்பு மற்றும் உணவு பழக்கவழக்கம் தொடர்பான சவால்களை சமாளிப்பதற்கு சிறுதானியங்கள் உதவும். இவ்வாறு அவர் கூறினார். இந்தியாவில் ஒரு கோடியே 70 லட்சம் டன் சிறுதானியங்கள் உற்பத்தி செய்யப்படுவதும் இவை ஆசியாவில் 80 சதவீத பங்களிப்பை கொண்டிருப்பதும் உலக அளவில் 20 சதவீத பங்களிப்பை பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. உலக அளவில் ஒரு ஹெக்டருக்கு சராசரி சிறுதானிய உற்பத்தி 1,229 கிலோ ஆகும். இது இந்தியாவில் 1,239 கிலோவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.



 


Similar News