'இதுவரை மக்களுக்காக பாஜக செய்த வளர்ச்சிப் பணிகள் எல்லாம் வெறும் டிரைலர் தான், மெயின் பிக்சர் இனிதான்' -மோடி!
2019 தேர்தல் வாக்குறுதிகளில் பாஜக பெரும்பாலானவற்றை நிறைவேற்றி விட்டது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில் நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்து வருகிறது. ராஜஸ்தானில் மொத்தம் உள்ள 22 தொகுதிகளுக்கு வரும் 19-ஆம் தேதி நடைபெற உள்ள முதற்கட்ட தேர்தலின் போது 12 தொகுதிகளுக்கும் வரும் 26 ஆம் தேதி நடைபெற உள்ள இரண்டாம் கட்ட தேர்தலின் போது 13 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு சுரு நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர் இந்தியா எப்படி இவ்வளவு வேகமாக வளர்கிறது என ஒட்டுமொத்த உலகமும் இன்று ஆச்சரியப்படுகிறது. அவர்களுக்கு தெரியாது. நாம் என்ன முடிவெடுத்தாலும் அதனை நிறைவேற்ற நம்மால் முடியும் .கடந்த 10 ஆண்டுகளில் நாடு மாறிக் கொண்டிருப்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். பத்தாண்டுகளுக்கு முன்னாள் இந்நிலை எவ்வளவு மோசமாக இருந்தது என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா? மிகப்பெரிய ஊழல்களில் ஈடுபட்டு காங்கிரஸ் கட்சி நாட்டை கொள்ளையடித்ததால் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்த நிலையில் இருந்தது. உலக அளவில் இந்தியாவின் நற்பெயர் குறைந்து கொண்டே வந்தது.
அத்தகைய சூழலில் தான் பாஜக ஆட்சிக்கு வந்தது .கோவிட் போன்ற ஒரு பெரிய நெருக்கடி நிலை வந்தபோது இந்தியா அழிந்துவிடும் என்று உலகம் நினைக்கத் தொடங்கியது. ஆனால் இந்த நெருக்கடியில் இந்தியர்களாகிய நாம் நமது நாட்டை உலகில் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாற்றினோம். இதுவரை நாம் செய்த வளர்ச்சி பணிகள் எல்லாம் வெறும் டிரைலர்கள் தான் என்பதை உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். தற்போது எல்லாம் பெரிய ஹோட்டல்களுக்கு சாப்பிட சென்றால் முதலில் பசியை தூண்டும் சில உணவு வகைகளை கொடுப்பார்கள். மோடி இதுவரை கொடுத்தது எல்லாம் அத்தகைய பசியை தூண்டும் உணவை மட்டும் தான் .நாம் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். பாஜக கண்டிப்பாக சொல்வதை செய்யும் .