விநாயகர் சிலைகளை அடித்து உடைக்கும் போலீசார்- பாதுகாப்பு வழங்குமாறு நீதிமன்றத்தில் மனு !
தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காகிதக் கூழ் மற்றும் களிமண்ணால் விநாயகர் சிலை தயாரிப்பவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்று உத்தரவிடக் கோரிய வழக்கில் விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் விநாயகர் சிலை தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சட்ட நடவடிக்கைகளை பின்பற்றி விநாயகர் சிலையை தயாரித்து வரும் தமிழ்நாடு கைவினை காகிதக்கூழ் விநாயகர் சிலைகள் மற்றும் களிமண் பொம்மைகள் தயாரிப்பு சங்கத்தின் தலைவர் முருகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் காகிதக் கூழ் மற்றும் களிமண்ணால் விநாயகர் சிலை செய்து வருவதாகவும் ஆனால் காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தங்கள் தொழிலுக்கு இடையூறு செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இன்னும் சில இடங்களில் சுற்றுச்சூழல் சட்டத்தை பின்பற்றி தயாரித்து வரும் களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகளை மனிதாபிமானமற்ற முறையில் அதிகாரிகள் அடித்து நொறுக்கி வருவதாகவும் கைவினை கலைஞர்களை தாக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது என்றும் வேதனை தெரிவித்தார். மேலும் சிலை தயாரிப்பு நிறுவனங்களுக்கு 'சீல்' வைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என்று தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, சட்ட நடவடிக்கைகளை பின்பற்றி விநாயகர் சிலை தயாரிப்பவர்களின் தொழிலுக்கு எந்த ஒரு இடையூறும் ஏற்படுத்தக் கூடாது என, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தனது மனுவில் கோரியுள்ளார். இந்த மனு, நீதிபதி ஆர்.மகாதேவன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த மனு தொடர்பாக ஒரு வாரத்தில் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று கூறி வழக்கை 17ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
Source : Dinamalar
Image courtesy : Dinamalar