தி.மு.க. எம்.எல்.ஏ. உதவியுடன் வீடு அபகரிக்க முயற்சி!- கமிஷனரிடம் பெண் புகார்!
Top Story
சென்னை தி.மு.க. எம்.எல்.ஏ. உதவியுடன் அவரது கார் டிரைவர் தனது வீட்டை அபகரிக்க முயற்சி செய்வதாக பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
சென்னை சோளிங்கநல்லூர் பகுதியை சேர்ந்த உஷா என்பவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் சோழிங்கநல்லூர் தொகுதி திமுக எம்எல்ஏவாக இருக்கும் அரவிந்த் ரமேஷிடம் கார் ஓட்டுநராக இருக்கும் ராஜா மற்றும் அவரது மனைவி லதா 2008ஆம் ஆண்டு சொந்த வீடு ஒன்று வாங்கி குடியேறியதாகவும், பிறகு அந்த வீட்டிற்கு அருகே இருக்கும் தனது வீட்டையும் விலைக்கு கேட்டதாகவும், அதை தர மறுத்ததால் ராஜா மற்றும் அவரது மனைவி தங்களுக்கு மிரட்டல் விடுப்பதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அவர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார். மேலும் வீட்டை தங்களிடம் விற்கவேண்டும் என்று வற்புறுத்திய போது ராஜா மற்றும் லதா ஆகியோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது அங்கு வந்த சோழிங்கநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. அரவிந்த் ரமேஷ் தங்களிடம் வீட்டை ஒப்படைக்குமாறு தெரிவித்துள்ளார்.
அப்படி நீங்கள் ஒப்படைக்கவில்லை என்றால் நாங்களே வீட்டை எடுத்துக் கொள்வோம் என்றும் மிரட்டல் விடுத்தார் என்று அந்த புகார் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே வீட்டை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் எம்.எல்.ஏ.வின் கார் ஓட்டுனர் ராஜா மற்றும் அவரது மனைவி லதா ஆகியோர் மீதும் இதற்கு உடந்தையாக இருக்கும் தி.மு.க எம்.எல்.ஏ. மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்ததாக அந்த பெண் தெரிவித்துள்ளார்.
Source NewsJ