புதுப்பிக்கப்பட்ட நினைவிடம்- இன்று மாலை திறந்து வைக்கும் பிரதமர் மோடி !

ஏப்ரல் மாதம் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த இந்த நினைவு சின்னம் திறப்பு விழா இன்று மாலை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-08-28 07:01 GMT

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள ஜாலியன்வாலா பாக் நினைவிடத்தின் புதுப்பிக்கப்பட்ட வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை மாலை 6.25 மணிக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைக்கிறார்.

இந்த ஆண்டு ஏப்ரல் 13-ஆம் தேதி ஜாலியன் வாலாபாக் படுகொலை நடைபெற்று 102 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து அங்குள்ள நினைவு சின்னம் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்படவுள்ளது. ஏப்ரல் மாதம் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த இந்த நினைவு சின்னம் திறப்பு விழா இன்று மாலை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெறும் விழாவில் ஜாலியன் வாலாபாக் நினைவு அறக்கட்டளையின் தலைவரான பிரதமர் மோடி, மத்திய கலாச்சார அமைச்சர் கிஷன் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், கவர்னர் வி.பி.சிங் பட்னோர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட மற்ற அறக்கட்டளை உறுப்பினர்கள் முன்னிலையில் நினைவிடத்தை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் ஹரியானா, உத்தரகண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேச முதலமைச்சர்களும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறக்கட்டளையின் உறுப்பினரான எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

அரசியல் தலைவர்கள் வீடியோ கான்பரன்சிங் மூலம் இணைந்தாலும், கலாச்சார அமைச்சகத்தின் அதிகாரிகள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் மைதானத்தில் அமர்த்து விழாவை காண்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

புதுப்பித்தலுக்கு பின்னர் பிரதான நினைவிடத்தை சுற்றி ஒரு தாமரை குளம் கட்டப்பட்டுள்ளது. இந்த வளாகத்தில் பயன்படுத்தப்படாத கட்டிடங்களை மாற்றியமைப்பதன் மூலம் நான்கு புதிய காட்சியகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த காலத்தில் பஞ்சாப்பில் நிகழ்ந்த நிகழ்வுகளின் வரலாற்று முக்கியத்துவத்தை, காட்சி வரைபடம் மற்றும் 3டி முறையில் காட்சிப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Source : Hindustan Times

Tags:    

Similar News