ஆப்கானிஸ்தானில் இசைக்கு தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் புகழ்பெற்ற நாட்டுப்புற பாடகர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆப்கானிஸ்தானில் அந்திராபி பள்ளத்தாக்கில் உள்ள பாக்லான் என்னும் மாகாணத்தை சேர்ந்த புகழ்பெற்ற நாட்டுப்புற பாடகர் ஃபவாத் அந்திராபி. இவர் தனது குடும்பத்துடன் இந்த மாகாணத்தில் வசித்து வந்து அங்குள்ள இயற்கையை பற்றி பாடல் இயற்றி, இசைத்து, பாடி வந்தார். இந்நிலையில் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பிறகு அங்கு இசைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று இவரது வீட்டிற்குள் புகுந்த தாலிபான்கள் அவரை வீட்டிற்குள் இருந்து வெளியே இழுத்துச் சென்று தலையில் சுட்டுக் கொன்றுள்ளனர். இதற்கு முன்னதாக இவரது வீட்டிற்கு வந்த தாலிபான்கள் இவருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் பிறகு இவருடன் சேர்ந்து தேனீர் அருந்தியதாகவும் சுட்டுக்கொல்லப்பட்ட ஃபவாத் அந்திராபியின் மகன் தெரிவித்துள்ளார்.
மேலும் தனது தந்தைக்கு பாடுவது மட்டுமே தெரியும் என்றும் பொதுமக்களை சந்தோசப்படுத்த வேண்டும் என்று பாடிவந்த அப்பாவியான தனது தந்தையை சுட்டுக் கொன்றவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த தாலிபான் கவுன்சிலிடம் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக ஐநாவின் கலாச்சார அமைப்பின் நிர்வாகியான கரிமா தனது ட்விட்டர் பக்கத்தில் அந்தராபியின் கொலை மிகுந்த வருத்தம் அளிப்பதாகவும், மனித உரிமைகளை மதிக்க தாலிபான்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
Source : Polimer news