சிறியமீன்களை பிடித்தால் போதாது போதை பொருட்களை கடத்தும் திமிங்கலங்களை பிடியுங்கள்- அதிகாரிகளுக்கு நிர்மலா சீதாராமன் அதிரடி உத்தரவு

இந்தியாவுக்கு போதைப்பொருட்களை அதிக அளவில் அனுப்பும் திமிங்கலங்களை பிடியுங்கள் என்று வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டார்.

Update: 2022-12-06 05:00 GMT

வருவாய் புலனாய்வு இயக்குனரகம் தொடங்கப்பட்டு  65 ஆண்டுகள் ஆனதை ஒட்டி டெல்லியில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. அதில் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் இடையே மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:-


வருவாய் புலனாய்வுத் துறையினர் போதை பொருட்களை பிடிக்கும் போதெல்லாம் மக்கள் மனதில் ஒரு கேள்வி எழுகிறது. இவர்களில் எத்தனை பேர் சிறைக்கு அனுப்பப்பட்டனர்? இவர்களுக்கு பின்னணியில் உள்ள பெரிய திமிங்கலங்கள் யார்? என்பதுதான் அந்த கேள்வி நீங்கள் சிறியமீன்களை பிடிக்கிறீர்கள். சிறிய கடத்தல்காரர்கள், வேலையாட்கள், இடைத்தரகர்கள் ஆகியோரை பிடிக்கிறீர்கள். மக்களின் நம்பிக்கையைப் பெற இவை போதாது. உங்களால் பெரிய திமிங்கலங்களை பிடிக்க  பிடிக்க முடியாதா? போதைப்பொருள் கடத்தல் காரர்கள் எப்படியும் தடயத்தை விட்டு செல்வார்கள். அதை வைத்து அவர்களுக்கு பின்னால் உள்ள பெரிய திமிங்கலங்களை பிடியுங்கள் .


கடத்தல்காரர்கள் உங்களைவிட புத்திசாலியாக இருக்க நீங்கள் அனுமதிக்க கூடாது. ஒரு பாக்கெட் அல்லது ஒரு கிலோ போதைப்பொருளுடன் பிடிப்படுபவருடன் இந்த வழக்கு இறுதி கட்டத்தை எட்டி விடாது.  இந்தியாவுக்குள் மலை அளவு போதைப் பொருட்களை அனுப்புபவர்களை பிடித்தால் தான் இறுதி கட்டத்தை எட்ட முடியும் . அதற்கு சர்வதேச அளவில் புலனாய்வு அமைப்புகளின் ஒத்துழைப்பு பெறுங்கள். ஒரு சில வழக்குகளில் கூட பெரிய திமிங்கலங்களை பிடிக்காவிட்டால் மக்கள் மனதில் உள்ள சந்தேகங்கள் நீடித்தபடியே இருக்கும் அதனால் பின்னணியில் இருப்பவர்களை சட்டத்தின் முன்பு நிறுத்துவதுடன் தண்டனை பெற்றுக் கொடுங்கள் இவ்வாறு அவர் பேசினார்.





 


Similar News