அபராதம் , ஜாமீன் தொகை செலுத்த முடியாமல் தவிக்கும் ஏழை சிறை கைதிகளுக்கு நிதி உதவி - அசத்தும் மத்திய அரசு

அபராதம் ஜாமின் தொகை செலுத்த முடியாமல் சிறைகளில் தவிக்கும் ஏழைக் கைதிகளுக்கு நிதி உதவி அளிக்கும் புதிய திட்டத்தை மத்திய அரசு தொடங்குகிறது.

Update: 2023-04-08 16:45 GMT

சிறைகளில் வாழும் ஏழை கைதிகளுக்கு நிதி உதவி அளிக்கும் புதிய திட்டத்தை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இந்த ஆண்டு தனது பட்ஜெட் உரையில் அறிவித்தார். இந்நிலையில் இந்த புதிய திட்டத்தை தொடங்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. பல்வேறு தரப்பினருடன் ஆலோசித்து திட்டத்துக்கான விரிவான வரையறைகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-


குற்றவியல் நீதி முறையில் சிறைகள் முக்கிய அங்கமாக உள்ளன . சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன . சிறைகள் தொடர்பாக அவ்வப்போது வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பிறப்பித்து வருகிறது. சிறைகளில் பாதுகாப்பு கட்டமைப்புகளை தரம் உயர்த்த நிதி உதவி வழங்கி வருகிறது.


சிறைகளில் விசாரணை கைதிகளின் பிரச்சனைகளை தீர்க்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சட்டப்பணிகள் ஆணையம் மூலம் அவர்களுக்கு இலவச சட்ட உதவி அளிக்கப்படுகிறது . அதைத்தொடர்ந்து ஏழை கைதிகளுக்கு நிதி உதவி அளிக்கும் திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. 


ஏழை கைதிகளில் பெரும்பாலும் சமூக ரீதியாக பின்தங்கியவர்கள், குறைவான படிப்பும் வருமானமும் கொண்டவர்கள். அவர்கள் அபராதமோ ஜாமீன் தொகையோ செலுத்த முடியாமல் சிறையில் வாடி வருகிறார்கள். அத்தகைய ஏழை கைதிகளுக்கு நிதி உதவி அளிக்கப்படும். அதன் மூலம் அவர்கள் சிறையில் இருந்து வெளிவர முடியும். சிறையிலும் நெரிசல் குறையும். தகுதியான ஏழை கைதிகளுக்கு பலன்கள் சென்றடைவதற்கான தொழில்நுட்ப வழிமுறைகள் பயன்படுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



 


Similar News