கன்னியாகுமரி போலீஸுக்கு அதிர்ச்சி கொடுத்த போலி இ-பாஸ்!

கன்னியாகுமரி போலீஸுக்கு அதிர்ச்சி கொடுத்த போலி இ-பாஸ்!

Update: 2020-06-14 07:15 GMT

சென்னையிலிருந்து தமிழகத்தின் மற்ற மாவட்டங்களுக்கு போலி இ பாஸ் மூலம் வாகனங்கள் அதிக அளவு செல்கிறது என்ற தகவல் கசிந்து வருகிறது. மேலும் இதனால் மற்ற மாவட்டங்களிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்கும் ஆபத்து உள்ளது

கன்னியாகுமரி மாவட்ட எல்லையான ஆரல்வாய்மொழி பகுதியில் 24 மணி நேரமும் வாகனங்கள் கண்காணிக்கப்படுகின்றன. இந்த நிலையில் போலி இ-பாஸ் மூலம் கன்னியாகுமரி மாவட்டத்துக்குள் வந்த சென்னையைச் சேர்ந்த டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தைப் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் குமார் சென்னையில் பணிபுரிந்துவருகிறார். இவரின் மனைவி கர்ப்பிணியாக இருப்பதால் சொந்த ஊரான கன்னியாகுமரி வருவதற்கு முடிவு செய்துள்ளனர். இ-பாஸ் விண்ணப்பிக்க பயணிக்கும் வாகனத்தின் பதிவு எண் உள்ளிட்டவை தேவை என்பதால் சென்னை சி.ஐ.டி நகர் பகுதியைச் சேர்ந்த வாடகைக் கார் ஓட்டுநர் பிரகாஷ் என்பவரிடம் விவரத்தை தெரிவித்துள்ளார். .

கார் ஓட்டுநரான பிரகாஷ் இ-பாஸ் பெற்றுத் தருவதாகவும், அதற்கு தனியாக 4,000 ரூபாய் செலவாகும் எனக் கூறுயுள்ளார். ஓட்டுனர் கூறியபடி இ-பாஸுக்காக 4,000 ரூபாய் சுரேஷ்குமார் கொடுத்துள்ளார். பிரகாஷ் ஒரு கம்ப்யூட்டர் மையத்துக்குச் சென்று போலியாக இ-பாஸ் தயாரித்து, பாஸ் கிடைத்து விட்டது எனக் கூறி சுரேஷ் குமாரின் மனைவி மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேருடன் சென்னையிலிருந்து தனது காரில் கன்னியாகுமரி அழைத்து வந்துள்ளார்.


ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடியில் போலீஸார் அந்த இ-பாஸில் இருந்த பார் கோட் ஸ்கேனர் மூலம் சோதனை செய்து பார்த்தனர். அப்போது அது போலியாக அச்சடிக்கப்பட்டது தெரிய வந்தது.

காரில் வந்த ஸ்ரீஜா மற்றும்  நான்கு பேரையும் அதிகாரிகள் தனிமைப்படுத்தினர். போலி பாஸ் தயாரித்து அவர்களை சென்னையில் இருந்து அழைத்து வந்த பிரகாஷ் மீது ஆரல்வாய்மொழி போலீஸார் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர். அழைத்து வர பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். மேலும், இ-பாஸ் தயாரிக்க உடந்தையாக இருந்தவர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Similar News