விளையாட்டுப் பயிற்சிக்கான முதன்மை பட்டயப் படிப்புகளுக்கான தகுதிகள் தளர்த்தப்பட்டுள்ளன - மத்தியஅரசு.!

விளையாட்டுப் பயிற்சிக்கான முதன்மை பட்டயப் படிப்புகளுக்கான தகுதிகள் தளர்த்தப்பட்டுள்ளன - மத்தியஅரசு.!

Update: 2020-07-11 02:06 GMT

பாட்டியாலாவில் உள்ள நேதாஜி சுபாஷ் தேசிய விளையாட்டுக் கழகம் என் எஸ் என் ஐ எஸ் விளையாட்டுப் பயிற்சிக்கான முதன்மை பட்டயப் படிப்புகளுக்கு நேரடி சேர்க்கை மூலம் 46 விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் 2020-21 ஆண்டுக்கான தொடரிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இது குறித்த முடிவை மத்திய இளைஞர் விவகாரம் விளையாட்டுத் துறை மத்திய அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு மே மாதம் அறிவித்திருந்தார்.

இந்தப் படிப்பில் சிறந்த விளையாட்டு வீரர்களின் பரவலான பங்கை உறுதிப்படுத்தும் முயற்சியாக தற்போது இந்த படிப்பில் சேர்வதற்கான முன்பு குறிப்பிடப்பட்டிருந்த சில தகுதிகள் தளர்த்தப்பட்டுள்ளன.

இந்தப் பட்டயப்படிப்பில் சேர்வதற்கான அடிப்படைக் கல்வித்தகுதி பிளஸ் டூ. விளையாட்டு சாதனைகள் தகுதியைப் பொறுத்தவரை மேலும் பல ஆசிய, காமன்வெல்த் பதக்கம் பெற்றவர்களைச் சேர்த்துக் கொள்ளும் வகையில், உலக சாம்பியன்ஷிப் மட்டப் போட்டிகளில் பங்கேற்றவர்கள் இந்தப் படிப்பில் சேரலாம்.

இந்த முடிவு குறித்துப் பேசிய இந்திய விளையாட்டுக் கழகத்தின் தலைமை இயக்குநர் திரு.சந்திப் பிரதான், "பயிற்சியளிக்கும் துறையில் சிறந்த விளையாட்டு வீரர்களை சேர்த்துக்கொள்வது என்பது மிக முக்கியமானதாகும்.

இந்தியாவில் வளர்ந்து வரும் விளையாட்டுச் சுற்றுச்சூழலின் பெருகிவரும் தேவைகளுக்கு ஏற்ற வகையில் பயிற்சி அளிப்பவர்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. எனவே நாட்டில் மிகச் சிறந்த திறமை கொண்ட பலரையும், இதில் ஈடுபடுத்த வேண்டிய அவசியம் உள்ளது. சேர்க்கைக்கான தகுதிகளில் தளர்வு ஏற்படுத்தப்பட்டு இருப்பதன் மூலம் இந்தப் படிப்புக்கு விண்ணப்பிக்க ஏராளமான விளையாட்டு வீரர்கள் தகுதி பெறுவார்கள்" என்று கூறினார்.

23 விளையாட்டுகளுக்கு ஒவ்வொரு விளையாட்டுத் துறையிலும் ஒரு விளையாட்டு வீரர், ஒரு விளையாட்டு வீராங்கனை பயிற்சியாளர் என மொத்தம் 46 சிறந்த விளையாட்டு வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவர்கள் நுழைவுத்தேர்வு எதுவும் எழுதத் தேவையில்லை. இந்தப் பட்டயப் படிப்பில் வரலாற்றில் முதன் முறையாக நுழைவுத்தேர்வு ஆன்லைன் மூலமாக நடத்தப்படுகிறது. ஒரே துறையைச் சேர்ந்த இரண்டு சிறந்த விளையாட்டு வீரர்கள் விண்ணப்பித்திருந்தால், இறுதி விண்ணப்பதாரரைத் தேர்ந்தெடுக்க புள்ளிக்கணக்கு பின்பற்றப்படும்.

சிறந்த விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிப்பதற்கு ஏதுவாக சேர்க்கைக்கான தகுதிகளை தளர்த்தியதையடுத்து, இந்தப் படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஜூலை 31 வரை நீடிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சிறந்த விளையாட்டு வீரர்கள் நீங்கலாக மற்ற விண்ணப்பதாரர்களைப் பொறுத்தவரை தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு தற்போது பட்டப்படிப்பை முடித்து, தேர்வு முடிவுகளுக்காகக் காத்திருப்பவர்களும், இதுவரை இறுதியாண்டு தேர்வு நடத்தப்படாத பல்கலைக்கழகங்களில் பதிவு செய்துள்ளவர்களும், இந்தப் பட்டயப்படிப்பில் சேர்வதற்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். ஆனால் அவர்கள் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30ஆம் தேதிக்குள் இறுதியாண்டு தேர்வு பெற்ற சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும்  

Similar News