கிராம மக்களுக்கு காங்கிரஸ் துரோகம் - பிரதமர் மோடி ஏன் அப்படி கூறினார்?
மகாத்மா காந்தி வார்த்தைகளுக்கு மதிப்பளிக்காமல் கிராம மக்களுக்கு காங்கிரஸ் துரோகம் செய்தது என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்
தேசிய பஞ்சாயத்து தினத்தை ஒட்டி மத்திய பிரதேச மாநிலம் ரேவாவில் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. அதற்கு பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். பஞ்சாயத்துகள் தங்கள் பொருட்களையும் சேவைகளையும் அரசு ஈ - சந்தை மூலமாக வர்த்தகம் செய்யும் திட்டமும் அவற்றில் அடங்கும். பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட நான்கு லட்சத்து 11 ஆயிரம் புதிய வீடுகளில் புதுமனை புகுவிழா நடத்தப்பட்டது. அதில் காணொளி காட்சி மூலமாக பிரதமர் மோடி பங்கேற்றார்.
ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் ரூபாய் 753 கோடி மதிப்புள்ள பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். இதனால 4,036 கிராமங்களை சேர்ந்த 9லட்சத்து 48,000 குடும்பங்கள் பலனடையும் திட்டத்தில் கிராமப்புறங்களில் சொத்துகளின் உரிமையாளர்களுக்கு சொத்துரிமையை நிலை நாட்ட உதவும் சொத்து அட்டைகளை பிரதமர் மோடி வழங்கினார். சுமார் 35 லட்சம் சொத்து அட்டைகளை அவர் ஒப்படைத்தார் . நாடு முழுவதும் ஒரு கோடியே 25 லட்சம் சொத்து அட்டைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
ரூபாய் 2300 கோடி மதிப்புள்ள பல்வேறு ரயில்வே திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். முடிவடைந்த திட்டங்களை தொடங்கி வைத்தார். ரெயில் நிலைய மறு சீரமைப்புக்கு அடிக்கல் நாட்டினார். மூன்று புதிய ரெயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-
சுதந்திரத்திற்கு பிறகு நீண்ட காலம் நாட்டை ஆண்ட காங்கிரஸ் கட்சி கிராமப்புற நம்பிக்கையை தகர்த்தது. சாலைகள், பள்ளிகள், மின்சாரம் அனைத்தும் அடிமட்டத்தில் இருந்தன. காங்கிரஸ் அரசு கிராமங்களை ஓட்டு வங்கியாக கருதாததால் அவற்றுக்கு பணம் செலவழிக்க தயங்கியது . அப்படி புறக்கணித்த அந்த கட்சியை மக்களும் புறக்கணித்தனர். சுதந்திரத்திற்கு முன்பு கூட பஞ்சாயத்து ராஜ் முறைக்கு ஓரளவு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது . ஆனால் காங்கிரஸ் கட்சியோ கிராம மக்களுக்கு துரோகம் செய்தது.