காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ஒருவழியாக முடிவான வேட்பாளர்கள் - சோனியா குடும்பத்தை புறந்தள்ள திட்டமா?

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு கார்கே சசிதரூர் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. கே என் திரிபாதி வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது

Update: 2022-10-02 10:45 GMT

காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் வரும் 17ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 24 ஆம் தேதி தொடங்கியது. நேற்று முன்தினம் மனு தாக்கல் முடிந்தது. தலைவர் பதவிக்கு சசிதரூர், அசோக் கெலாட், திக்விஜய்சிங் போட்டியிடுவர் என தகவல்கள் வெளிவந்தன.அசோக் கெலாட்டும் விஜய் சிங்கும் போட்டியிடப் போவதில்லை என அறிவித்தனர். எதிர்பாராத திருப்பமாக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மூத்த தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே களத்தில் குதித்தார். கடைசி நாளில்  கார்கே, சசிதருவர் மட்டுமின்றி புதிதாக ஜார்க்கண்ட் காங்கிரஸ் மூத்த தலைவர் கே.என்.திரிபாதி ஆகியோர் வேட்புமனுவை தாக்கல் செய்தனர். இதனால் மும்முனை போட்டி உருவாகும் நிலை ஏற்பட்டது. நேற்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது.


பரிசீலணையின் போது கார்கே, சசிதரூர் மனுக்கள் ஏற்கபட்டன. ஆனால் கே. என் திருபாதி மனு தள்ளுபடி செய்யப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் ஆணைய தலைவர் மதுசூதன் மிஸ்திரி டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது :-

மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் இருவரிடையே இப்போது நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. ஜார்க்கண்டை சேர்ந்த மற்றொரு வேட்பாளரின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அவரை முன்மொழிந்தவர்களில் ஒருவரின் கையெழுத்து பொருந்தவில்லை. மற்றொருவர் கையெழுத்து இரண்டு முறை போடப்பட்டுள்ளது. எனவே அவரது மனு நிராகரிக்கப்பட்டது. வேட்புமனுக்களை திரும்ப பெற எட்டாம் தேதி வரை ஏழு நாட்கள் அவகாசம் உள்ளது. எனவே எட்டாம் தேதி தான் நிலைமை தெளிவாக தெரிய வரும். யாரும் வேட்பு மனுவை திரும்ப பெறாவிட்டால் வாக்குப்பதிவு நடக்கும்.


வேட்புமனு பரிசீலனை முடிந்ததை ஒட்டி சசிதரூர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் வேட்புமனு பரிசீலனையைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நானும் கார்கேவும் நட்பு ரீதியிலான போட்டியில் உள்ளோம் என்று அறிந்து மகிழ்ச்சி அடைந்துள்ளேன். இந்த ஜனநாயக செயல் முறையில் கட்சியும் எங்கள் அனைத்து தோழர்களும் பலனடைவார்கள் என குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற கொள்கை இப்போது பின்பற்றப்படுகிறது. இதனால் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிற கார்கே மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை விட்டு விலகி விட்டதாகவும், கட்சி தலைவர் சோனியா காந்திக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


கார்கே விலகலால் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு பா சிதம்பரம் மற்றும் திக்விஜய்சிங் பெயர்கள் அடிபடுகின்றன.





 


Similar News