சீனா, ஜப்பான் உட்பட 5 நாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் - மன்சுக் மாண்டவியா
சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருகிற விமான பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்படும் என்று மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.
கொரோனாவில் இருந்து மீண்டு வந்து விட்டோம் என்று கருதி மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய நிலையில் "இல்லை, நான் இன்னும் முடிவுக்கு வந்துவிடவில்லை" என்று சொல்லத்தக்க விதத்தில் மூன்று ஆண்டுகளைக் கடந்து கொரோனாவின் பாதிப்பு தொடர்கிறது. தற்போது சீனா உள்ளிட்ட பல நாடுகளில் உருமாறிய கொரோனா (பி.எப் 7)அலை வீசுகிறது. இது கவலை அளிப்பதாக அமைந்துள்ளது. இதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் நமது நாட்டில் மத்திய மாநில அரசுகளால் முடுக்கிவிடப்பட்டுள்ளன. முதல் கட்டமாக சென்னை,மும்பை, பெங்களூர், டெல்லி, கோவா உள்ளிட்ட இந்திய விமான நிலையங்களில் வந்து இறங்குகிற சர்வதேச பயணிகளில் இரண்டு சதவீதத்தினருக்கு பரிசோதனை மேற்கொள்வது நேற்று தொடங்கியுள்ளது.
இதற்கான வழிகாட்டும் நெறிமுறைகள் வெளியிடப்பட்டு பின்பற்றப்படுகின்றன. கத்தார் நாட்டின் தோஹா நகரிலிருந்து சென்னைக்கு நேற்று இண்டிகோ விமான மூலம் வந்து இறங்கிய பயணிக்கு விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. விமான நிலையத்தில் நடத்தப்பட்ட இந்த கொரோனா பரிசோதனை நடைமுறை சுமூகமாக உள்ளது என அவர் திருப்தி தெரிவித்து அவர் கருத்து கூறும் வீடியோ காட்சிகளை சென்னை விமான நிலையம் டுவிட்டரில் வெளியிட்டு "இந்த பயணி சுமுகமான சோதனை நடைமுறைகளால் மகிழ்ச்சி அடைந்துள்ளார்" என குறிப்பிட்டுள்ளது. இரண்டு சதவீத பயணிகள் கொரோனா பரிசோதனைக்கு பின்னர் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்துவிடலாம்.
இந்த நிலையில் கொரோனா பரவல் அதிக அளவில் உள்ள சீனா, ஜப்பான், தென் கொரியா, தாய்லாந்து மற்றும் சிங்கப்பூர் ஆகிய ஐந்து நாடுகளில் இருந்து வருகிற அனைத்து பயணிகளுக்கும் ஆர்.டி.பி.சி. ஆர் எனும் கொரோனா பரிசோதனை செய்வது கட்டாயமாக்கப்படும் என்று மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார். இது பற்றிய அவர் குஜராத் மாநிலத்தின் தலைநகரான காந்தி நகரில் நேற்று மேலும் கூறியதாவது சீனா ஜப்பான் தென் கொரியா சிங்கப்பூர் தாய்லாந்தில் இருந்த வருகிற விமான பயணிகள் யார் சுவிதா தளத்தின் மூலம் கண்காணிக்கப்படுகிறார்கள். கொரோனா பெருந்தொற்று நிலையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டால் அல்லது காய்ச்சல் இருந்தால் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.