இணையவழித் தாக்குதலால் இந்திய அணு மின் நிலையங்களுக்கு பாதிப்பில்லை – தொடர்ச்சியாக பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!

இணையவழித் தாக்குதலால் இந்திய அணு மின் நிலையங்களுக்கு பாதிப்பில்லை – தொடர்ச்சியாக பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!

Update: 2019-11-28 13:37 GMT

இணையவழித் தாக்குதலால் இந்திய அணுமின் நிலையங்களுக்கு பாதிப்பு ஏதுமில்லை என்று மத்திய அணுசக்தித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.


கூடங்குளம் அணு மின் நிலையத்தில் அன்றாட நிர்வாகப் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் நிர்வாக கட்டமைப்பு, அண்மையில் ஒரு இணையவழித் தாக்குதலுக்கு ஆளானது தெரிய வந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.


பாதிக்கப்பட்ட கணினியில் நிர்வாக செயல்பாடு தொடர்பான விவரங்கள் மட்டுமே இருந்தன. அணு மின் நிலையத்தின் கட்டுப்பாடு மற்றும் சாதனங்கள் விவரம் எதுவும், உள்பயன்பாட்டு இணையதளம் மற்றும் நிர்வாகம் தொடர்பான கட்டமைப்புகளுடன் இணைக்கப்படவில்லை.


அணு மின் நிலைய சாதனங்கள் பிரத்யேகமானவை என்றும் அதனை நிர்வாக கட்டமைப்பு மூலம் அணுக முடியாது என்பதோடு அவை எந்த வகையிலும் பாதிக்கப்படவும் இல்லை என்று அமைச்சர் ஜிதேந்திர சிங் தெளிவுபடுத்தியுள்ளார்.


அணு மின் நிலையத்தின் நிர்வாக கட்டமைப்பில் உள்ள தகவல் பாதுகாப்பு முறையை மேலும் வலுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இணையதளம் மற்றும் நிர்வாக உள் இணைப்புகளை கடினப்படுத்துவது, அகற்றக் கூடிய ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதித்தல், வலைதளங்கள் மற்றும் கணினி முகவரிகளை தடை செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


அணு சக்தி துறையின் கணினி & தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு ஆலோசனைக் குழு அளித்துள்ள பரிந்துரைக்கு ஏற்ப குறுகிய கால மற்றும் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Similar News