இந்தி நடிகை ஆஷா பரேக்குக்கு தாதா சாகேப் பால்கே விருது
பழம்பெரும் இந்தி நடிகை ஆஷா பரேக்குக்கு 2020 ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு
இந்திய திரைப்படத் துறையில் வாழ்நாள் சாதனைக்காக வழங்கப்படும் உயரிய விருது தாதா சாகேப் பால்கே விருது. திரைப்படத்துறையின் தந்தை என அழைக்கப்படும் 'தாதா சாகேப் பால்கே' பெயரில் இந்த விருது வழங்கப்படுகிறது. இதற்கு முன் நடிகர்கள் திலீப் குமார், ராஜ்குமார், சிவாஜி கணேசன் ,அமிதாப்பச்சன் ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் கே. பாலச்சந்தர் உள்ளிட்டோர் இந்த விருதை பெற்றுள்ளனர். ரஜினிகாந்த் கடந்த 2019 ஆம் ஆண்டுக்கான விருதை பெற்றார்.
இந்த நிலையில் 2020 ஆம் ஆண்டுக்கான விருது பழம்பெரும் இந்தி நடிகை ஆஷா பரேக்குக்கு வழங்கப்படுவதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் நேற்று அறிவித்தது. இது குறித்த தகவல் ஒளிபரப்பு துறை மந்திரி அனுராக் தாக்கூர் இந்திய சினிமாவுக்கு ஆஷா பரேக், வாழ்நாள் முழுவதும் மிகச்சிறந்த பங்களிப்பு செய்ததை அங்கீகரிக்கும் விதமாக அவருக்கு தாதா சாகேப் விருதுக்கான அறிவிப்பை வெளியிடுவதில் நான் பெருமை அடைகிறேன் என்று கூறியுள்ளார். மேலும் இந்த விருது வருகிற 30-ஆம் தேதி ஜனாதிபதி திரௌபதி முர்மு தலைமையில் விக்யான்பவனில் நடைபெறும் 68-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். நடிகை ஆஷா பரேக் நடிகை மட்டுமல்லாது இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் இந்திய செவ்வியல் நடன கலைஞராகவும் உள்ளார்.
95-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அவருக்கு 1992 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. 1998 முதல் 2001 வரை மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். இவரை ஆஷா போஸ்லே, ஹேமமாலினி, பூனம் தில்லான் ,டி .எஸ் .நாகாபரணா மற்றும் உதித் நாராயண் ஐந்து பேர் அறிஞர் நடுவர் குழு விருதுக்கு தேர்ந்தெடுத்தது குறிப்பிடத்தக்கது.