"ஏக் ப்யார் கா நக்மா ஹே" : ஹிந்தியில் பாட்டு பாடி அசத்திய தி.மு.க எம்.பி..!

"ஏக் ப்யார் கா நக்மா ஹே" : ஹிந்தியில் பாட்டு பாடி அசத்திய தி.மு.க எம்.பி..!

Update: 2021-02-16 08:30 GMT

காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தின் பிரிவு உபச்சார விழாவில் தி.மு.க எம்.பி திருச்சி சிவா ஹிந்தி பாட்டு பாடிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. பலரும் தி.மு.க -வின் மொழி அரசியல் மீதான இரட்டை நிலையை விமர்சித்து வருகின்றனர். 

தமிழகத்தில் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தின் மூலம் மொழி பிரிவினைவாதத்தை மக்களிடையே புகுத்தி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த கட்சி தி.மு.க. இதனால் தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு ஹிந்தி படிக்க வாய்ப்பு கிடைக்காமல் இருக்கிறது. எனினும் அதிக கட்டணம் செலுத்தி தனியார் சி.பி.எஸ்.இ பள்ளிகளில் படிக்கும் வசதி படைத்த மாணவர்களுக்கு ஹிந்தி படிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது என்பது அரசியல் விமர்சகர்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது. தி.மு.க எம்.பி-க்கள் அவ்வப்போது ஹிந்தி மொழி மீது வன்மம் கக்குவதை வாடிக்கையாக கொண்டு வருகின்றனர். எனினும் தி.மு.க-வில் எம்.பி.பியாக இருப்பவர்களுக்கும், மந்திரிகளாக இருந்தவர்களுக்கும் நன்றாக ஹிந்தி தெரியும் என்பதே நிதர்சனம். 


காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை தலைவர் குலாம் நபி ஆசாத் 2015-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மூலம் மாநிலங்களவை எம்.பி-யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பதவி காலம் நிறைவடைகிறது. அதனையொட்டி குலாம் நபி ஆசாத்தை மாநிலங்களவையில் புகழ்ந்து பேசிய பிரதமர் மோடி கண்கலங்கினார். ஜம்மூ காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்களில் சிக்கிக்கொண்ட குஜராத் மக்களுக்கு அப்போது முதல்வராக இருந்த குலாம் நபி ஆசாத் எப்படி உதவினார் என்பதை நினைவு கூர்ந்தார்.

அதனை தொடர்ந்து பேசிய குலாம் நபி ஆசாத், பாகிஸ்தானுக்கு செல்லாத அதிர்ஷ்டசாலிகளில் நானும் ஒருவன் என்றார். ஒரு இந்திய முஸ்லிமாக இருப்பது எனக்கு பெருமை என்றும் கூறினார்.

இதனை தொடர்ந்து குலாம் நபி ஆசாத்திற்கு பிரிவு உபச்சார விழா நடத்தப்பட்டது. அந்த நிகழ்வில் தான் தி.மு.க எம்.பி திருச்சி சிவா ஹிந்தியில் பாட்டு பாடி அசத்தியுள்ளார். 1972 ஆம் ஆண்டு வெளிவந்த ஷோர் என்ற ஹிந்தி திரைப்படத்தில் அமைந்துள்ள "ஏக் ப்யார் கா நக்மா ஹே" என்ற பாடலை அழகாக, ரம்யமாக  பாடியுள்ளார். அதன் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. பலரும் தி.மு.க-வின் மொழி பிரிவினைவாத அரசியலில் உள்ள இரட்டை நிலைப்பாட்டை கேள்வி கேட்டு வருகின்றனர்.


தி.மு.க-வினர் ஹிந்தியை பயன்படுத்துவது இது முதல் முறை அல்ல. சென்னை சவ்கார்பேட்டையில் உள்ள ஹிந்தி பேசும் மக்களின் வாக்கை பெற தி.மு.க ஹிந்தியில் போஸ்டர் அடித்தது அனைவரும் அறிந்ததே. மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி 2014 ஆம் ஆண்டு தமிழகத்தில் உள்ள ஹிந்தி மக்களிடையே பிரச்சாரம் செய்தபோது ஹிந்தியில் பாட்டு பாடி வாக்கு சேகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


 

Similar News