'என் மண் என் மக்கள்- மோடியின் தமிழ் முழக்கம்': மத்திய அரசின் அசத்தல் சாதனைகளை கூற அண்ணாமலையின் பயணம் ஆரம்பம்

அண்ணாமலை நடைபயணத்தை மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்று தொடங்கி வைக்கிறார்.

Update: 2023-07-28 06:30 GMT

'என்மண் என் மக்கள்' என்ற தலைப்பில் பா.ஜனதா சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை ராமேஸ்வரத்தில் இருந்து இன்று நடை பயணம் தொடங்குகிறார். தமிழகம் முழுவதும் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சென்று மத்திய அரசின் கடந்த 9 ஆண்டு கால சாதனைகள் குறித்து மக்களிடம் எடுத்துக் கூறும் வகையில் இந்த நடை பயணம் மேற்கொள்ளப்படுகிறது. நடைபயண தொடக்க விழா ராமேஸ்வரம் பஸ் நிலையம் எதிரே உள்ள திடலில் நடைபெறுகிறது.மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேரில் வந்து தொடங்கி வைத்து பேசுகிறார். நடை பயணத்திற்காக சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்த அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:-


ராமேஸ்வரத்தில் பா.ஜ.க.சார்பில் பாதயாத்திரை தொடங்க இருக்கிறது. மத்திய உள்துறை மாதிரி அமித்ஷா முக்கிய விருந்தினராக கலந்து கொள்கிறார். இது போல் பா.ஜனதா தலைவர்கள் தொண்டர்கள் கூட்டணி கட்சித் தலைவர்கள் திரண்டு வருகிறார்கள். 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக 'என் மண் என் மக்கள் மோடியின்- தமிழ் முழக்கம்' என்ற பெயரில் இந்த பாதயாத்திரை நடக்க இருக்கிறது.


தமிழகத்தில் ஐந்து பகுதியாக நடக்கும் இந்த யாத்திரையின் மூலம் 234 தொகுதிகளுக்கும் செல்கிறோம். மூத்த தலைவர்கள் இதனை வழிநடத்துவார்கள். ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது.முதல் பகுதி யாத்திரைக்கு முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் தலைமை தங்குகிறார்.கட்சியின் மாநில தலைவராக நான் எல்லா இடத்திலும் கலந்து கொள்கிறேன். ஊர் பகுதிகளில் நடந்து 1700 கிலோ மீட்டர் தூரமும் மற்ற பகுதிகளில் சிறப்பு பஸ் மூலம் 900 கிலோ மீட்டர் தூரமும் இந்த யாத்திரை நடக்கும்.


168 நாட்களில் 234 தொகுதிகளுக்கும் செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஜனவரி 20- ஆம் தேதிக்குள் யாத்திரியை முடிக்க திட்டமிட்டு இருக்கிறோம். இதில் பங்கேற்க கூட்டணி தலைவர்கள் எல்லோரையும் அழைத்திருக்கிறோம். மூன்றாவது முறையாக மோடி பிரதமராக ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என்பதற்காகவும் மக்களின் நம்பிக்கையை பெறுவதற்காகவும் தான் இந்த யாத்திரை நடக்கிறது. நடைபயண தொடக்க விழாவுக்காக நாடாளுமன்ற வடிவில் பிரம்மாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று இதற்கான இறுதி கட்டப் பணிகள் மும்முரமாக நடந்தன. சாலையின் இரு புறமும் பாஜனதா கொடிகள் கட்டப்பட்டு வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.


SOURCE :DAILY THANTHI

Similar News