சுங்கத்துறை தலைமை அலுவலகத்திற்கு 91 கோடியில் புதிய கட்டிடம் - நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டிய கட்டிடத்தின் சிறப்பு என்ன?

சென்னை சுங்கத்துறை தலைமை அலுவலகத்திற்கு 91 கோடியில் 9 மாடிகளுடன் கட்டப்பட உள்ள புதிய கட்டிடத்திற்கு மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று அடிக்கல் நாட்டினார்.

Update: 2022-12-19 13:30 GMT

சென்னை ராஜாஜி சாலையில் 100 ஆண்டு பழமை வாய்ந்த சுங்கத்துறை தலைமை அலுவலக கட்டிடம் இயங்கி வருகிறது. இதன் அருகே அனைத்து வசதிகளுடன் சுங்கத்துறைக்கு 'வைகை' என்ற பெயரில் 91 கோடியே 64 லட்சம் செலவில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. அதன்படி 9 மாடிகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா சுங்கத்துறை அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரிய தலைவர் விவேக் ஜோரி வரவேற்றார். விழாவில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பூஜிக்கப்பட்ட செங்கற்களை எடுத்து கொடுத்து புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நட்டினார்.


முன்னதாக நடந்த பூமி பூஜைகளில் அவர் பங்கேற்றார்.பின்னர் அங்கு மரக்கன்றுகளை நட்டார். இதன் பின்பு கல்வெட்டை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-    வர்த்தக முன்னேற்றத்தை இந்தியா அடைவதற்கு சுங்கத்துறையின் பணி முக்கியமானது. அந்த அடிப்படையில் சுங்கத்துறை அலுவலர்கள் பணியாளர்களுக்கு சரியான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். 'வைகை' வளாகம் சுங்க அதிகாரிகளின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் நவீன வடிவமைப்புடன் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த கட்டிடம் கட்டப்பட உள்ளது. பெண்களுக்கான அனைத்து வசதிகளுடன் இந்த புதிய கட்டிடம் வடிவமைக்கப்படுகிறது.


தமிழகத்தில் முன்யோசனுடன் இதுபோன்ற அலுவலக கட்டிடம் கட்டப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அதிக அளவு மின்சார பயன்பாடு இல்லாத வகையில் காலநிலை மாற்றத்தை கருத்தில் கொண்டு இந்த கட்டிடம் கட்டப்படுவது நல்ல முயற்சி ஆகும். சென்னையில் புதிதாக கட்டப்படும் 'வைகை' வளாகம் இனி கட்டப் போகும் கட்டிடங்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். ஒரு லட்சத்து 70 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட உள்ள இந்த கட்டிடம் 2024 ஆம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என விழாவில் பேசி அதிகாரிகள் தெரிவித்தனர்.





 


Similar News