என்.எல்.சி சுரங்கத்தில் தீ விபத்து - வீடியோ வெளியானதால் பரபரப்பு

நெய்வேலி என்எல்சி சுரங்கத்தில் தீ விபத்து ஏற்பட்டது இது தொடர்பாக வீடியோ வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Update: 2022-11-09 05:30 GMT

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் மூன்று நிலக்கரி சுரங்கங்கள் இயங்கி வருகிறது. சுரங்கத்தில் நவீன் எந்திரங்களை பயன்படுத்தி நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சுரங்கங்களில் வெட்டி எடுக்கப்படும் நிலக்கரியானது டிரைவ் ஹெட்பகுதிகள் இருந்து நிலக்கரி சேமிப்பு கிடங்கிற்கு தனியே ஓடுபாதை அமைத்து கன்வேயர் பெல்ட் உதவியுடன் எடுத்துச் செல்லப்படுகிறது. இதற்கிடையே என்.எல்.சி.சுரங்க பகுதியில் தீப்பற்றி எரிவது போன்ற வீடியோ பதிவு ஒன்று நேற்று முதல் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இது பற்றி அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது:- என்.எல்.சி.சுரங்கம் 1 ஏ பகுதியில் உள்ள டிரைவ்ஹெட்டில் கடந்த ஆறாம் தேதி அதிகாலையில் கன்வேயர் பெல்ட்டில் ஏற்பட்ட உராய்வின்  காரணமாக தீப்பற்றி எரிந்தது. அதிலிருந்து எழுந்த தீப்பொறிகள் அந்த பகுதியில் சிதறி கிடந்த நிலக்கரி துகள்களில் பட்டதால் புகை மூட்டத்துடன் தீ மேலும் பரவி எரிய தொடங்கியது.


இதனால் அந்த பகுதி புகை மண்டலமாக காட்சியளித்தது. இது பற்றி அறிந்த மத்திய தொழிலக பாதுகாப்பு படை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விருந்து சென்று தீயை அணைத்தனர். இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. சுமார் 30 அடி நீளம் உள்ள கன்வேயர் பெல்ட் மட்டும் எரிந்து சேதமானது. எரிந்த கன்வேயர் பெல்ட்டுகளை மாற்றி உடனடியாக எந்திரத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வந்து விட்டதாக தெரிவித்தனர். இதற்கிடையே என்.எல் .சி சுரங்கப்பகுதி பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். அங்கிருந்து வீடியோ வெளியானது குறித்து விசாரித்த போது தீப்பற்றி எரிந்த சமயத்தில் அங்கிருந்த யாரோ ஒருவர் தான் அதை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவை வேறு யாரோ ஒருவருக்கு அனுப்பியதன் காரணமாக தற்போது தீ விபத்து சம்பவம் பற்றிய தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.





 


Similar News