1962 ஆம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக மத்திய அரசு மூன்றாவது முறையாக வெற்றி : மக்களுக்கு நன்றி- பிரதமர் மோடி மகிழ்ச்சி!
1962 ஆம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக மத்திய அரசு தொடர்ந்து மூன்றாவது முறையாக வென்றிருப்பதாக பிரதமர் மோடி மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் ஆளும் பா.ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து இருக்கிறது. பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது .இதன் மூலம் மத்தியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக பா.ஜனதா ஆட்சி அமைக்கிறது .தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டதை தொடர்ந்து பிரதமர் மோடி நேற்று மாலையில் டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அவருக்கு கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றும்போது பிரதமர் மோடி கூறியதாவது:-
1962 ஆம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக மத்தியில் ஆளும் அரசு தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்திருக்கிறது. பா.ஜனதா மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி மீது மக்கள் முழுமையான நம்பிக்கையை வெளிப்படுத்தி இருக்கின்றனர். நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் மக்கள் ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனம் மீதான நம்பிக்கையின் வெற்றி ஆகும். நமது அரசியல் சாசனம் எங்களுக்கு வழிகாட்டும் ஒளியாக இருக்கிறது. இந்தியாவை ஒரு வளர்ந்த நாடாக உருவாக்குவதற்காக கட்சி பேதம் இன்றி அனைத்து மாநில அரசுகளுடனும் இணைந்து பணியாற்றுவோம் என்று உறுதி அளிக்கிறேன் ஊழலுக்கு எதிரான போராட்டம் நாளுக்கு நாள் கடினமாகி வருகிறது.
அரசியல் நலனுக்காக ஊழல் வெட்கமின்றி மகிமைப்படுத்தப்படுகிறது. எங்கள் மூன்றாவது ஆட்சிக்காலத்தில் அனைத்து வகையான ஊழலையும் வேரறுப்பதில் தேசிய ஜனநாயக கூட்டணி அதிக கவனம் செலுத்தும். இந்த தேர்தலில் பல மாநிலங்களில் காங்கிரஸ் துடைத்தெறியப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகள் இணைந்து பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கையைவிட பாஜக தனித்து வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கை அதிகம். மத்தியபிரதேசம், குஜராத், சத்தீஸ்கர் ,ஒடிசா ,டெல்லி, இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் பாஜக அபார வெற்றி பெற்று இருக்கிறது. கேரளாவில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றிருக்கிறார். அந்த மாநிலத்தில் கட்சியின் ஏராளமான தொண்டர்கள் தங்கள் உயிரை தியாகம் செய்திருக்கின்றனர்.