மோடி போன்ற ஊழலற்ற மக்களின் மனதை அறிந்த தலைவர் நாட்டுக்குத் தேவை : நடிகர் சரத்குமார்!
பிரதமர் மோடியின் ரசிகனாக இருந்து தொண்டனாக மாறியுள்ளேன் என்று நடிகர் சரத்குமார் பாஜக பொதுக் கூட்டத்தில் பேசினார். அதுமட்டுமின்றி ஊழலற்ற ஒரு தலைவர் நாட்டுக்கு தேவை என்றும் கூறியுள்ளார்
கன்னியாகுமரி அருகே உள்ள அகஸ்தீஸ்வரத்தில் பாஜனதா சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. மோடி பங்கேற்று பேசினார். முன்னதாக நடிகர் சரத்குமார் பேசுகையில் கூறியதாவது :-
சமத்துவ மக்கள் கட்சியை பாரத ஜனதாவுடன் இணைத்த பிறகு நான் பேசும் கன்னி பேச்சு. நாடாளுமன்றத்திலும் சட்டசபையில் கன்னி பேச்சை பேசிய நான் இங்கு கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் கன்னி பேச்சை பேசுகிறேன். மோடி மூன்றாவது முறை பிரதமராக வேண்டும் என்ற கருத்து இருக்கிறது. இந்த கருத்தை தமிழகம் முழுவதும் மக்கள் மனதில் சிறப்பாக ஆழமாக பதிய வைப்பேன்.
எடுத்த காரியத்தை முடிக்காமல் நான் இருந்ததில்லை .அப்படியானால் ஏன் எடுத்த காரியத்தை முடிக்காமல் கட்சியை இணைத்து விட்டீர்கள் என்று கேட்பீர்கள். ஊழலற்ற மற்றும் மக்களின் மனதை அறிந்த தலைவர் நாட்டுக்கு தேவை .எந்த ஒரு சுயலாபமும் இல்லாமல் நாட்டு மக்களுக்காக பிரதமர் மோடி ஆட்சி செய்கிறார் .தமிழகத்தில் ஊழல் கட்சிகள் அகற்றப்பட வேண்டும். 57 ஆண்டுகள் திராவிடக் கட்சிகள் ஆட்சி செய்து விட்டனர் .திராவிடத்தை புரிந்து கொள்ளாமல் திராவிடம் என பேசி குடும்ப ஆட்சியும் மன்னராட்சியும் தான் நடந்து கொண்டிருக்கிறது.
இந்திய அளவில் மட்டுமல்ல உலக அளவில் இந்தியாவின் பெருமையை ஒரு தலைவன் எடுத்துச் சென்றிருக்கிறார் என்றால் அது பிரதமர் நரேந்திர மோடி தான். சிறந்த தலைவருக்கு உழைப்பு ,நீதி மற்றும் நியாயம் ஆகியவை இருக்க வேண்டும். உழைப்பின் சிகரம் பிரதமர் மோடி தான். தொடர்ந்து குடும்ப அரசியல் நடந்து கொண்டிருக்கிறது .இதை கிண்டலாக சிரிப்பதற்காகவும் சொல்லவில்லை. சிந்திக்க வேண்டும். 57 ஆண்டுகள் மூளைச்சலவை செய்து வைத்திருக்கிறார்கள். அமைச்சர்களின் வாரிசுகளை தான் கொண்டு வருகிறார்கள்.