'கீதா பிரஸ்' புத்தக பதிப்பகத்துக்கு காந்தி அமைதி விருது - பிரதமர் மோடி தலைமையிலான குழு முடிவு
கீதா பிரஸ் புத்தக பதிப்பகத்துக்கு காந்தி அமைதி விருது வழங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான குழு ஏக மனதாக முடிவு செய்துள்ளது.
தேசத்தந்தை மகாத்மா காந்தியின் கொள்கைகளுக்கு மரியாதை அளிக்கும் விதமாக அவரது 125 - வது பிறந்தநாள் ஆண்டையொட்டி கடந்த 1995 - ஆம் ஆண்டு காந்தி அமைதி விருதை மத்திய அரசு உருவாக்கியது. தேர்வுக்குழுவால் தேர்வு செய்யப்படும் உலகின் எந்த ஒரு நபர் அல்லது நிறுவனத்துக்கும் இந்த விருந்து வழங்கப்படும்.
இது ரூபாய் ஒரு கோடி பரிசுத்தொகை பாராட்டு பத்திரம், பட்டயம் மற்றும் விசேஷ கைவினை அல்லது கைத்தறி பொருள் அடங்கியது. கடந்த 2021 - ஆம் ஆண்டுக்கான காந்தி அமைதி வருதை உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள 'கீதா பிரஸ்' பதிப்பகத்துக்கு வழங்குவது என பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேர்வு கூடி ஏகமனதாக முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக மத்திய கலாச்சார அமைச்சகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கடந்த 1923 - ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட 'கீதா பிரஸ்' உலகின் மிகப்பெரிய பதிப்பகங்களில் ஒன்றாகும். இந்த பதிப்பகம் 14 மொழிகளில் 41 கோடியே 70 லட்சம் புத்தகங்களை வெளியிட்டுள்ளது. அவற்றில் 16 கோடியை 21 லட்சம் பகவத் கீதை புத்தகங்களும் அடக்கம்.
காந்திய கொள்கை அடிப்படையில் சமுதாய கூட்டு மேம்பாட்டுக்காக இந்த பதிப்பகம் ஆற்றிய முக்கியமான, இணையற்ற பங்களிப்புக்காக காந்தி அமைதி விருது வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.