மத்திய நிதி மந்திரி அறிவித்த ஆன்லைன் விளையாட்டு களுக்கான ஜி.எஸ்.டி சதவீதம்
ஆன்லைன் விளையாட்டு களுக்கு 28% ஜி.எஸ்.டி வசூலிக்கப்படும் என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
மத்திய அரசின் ஐம்பதாவது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லி விஞ்ஞான் பவனில் நேற்று நடைபெற்றது. இதில் அனைத்து மாநில நிதி மந்திரிகள் மற்றும் நிதி திரைய செயலாளர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பாக அதிக அளவில் விவாதங்கள் நடைபெற்றன. இதில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக ஆன்லைன் விளையாட்டு களுக்கு திறமை மற்றும் வாய்ப்பு என்ற வேறுபாடு இல்லாமல் 28% ஜி.எஸ்.டி விதிக்க முடிவு செய்யப்பட்டது.
இது தவிர குதிரை பந்தயத்துக்கும் 28% ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படுகிறது. தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துடன் ஜி.எஸ்.டி கவுன்சில் தொடர்பில் இருப்பது உறுதி செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. 28 சதவீத வரி விதிப்புக்கான தேதி விவரங்கள் ஜி.எஸ் டி சட்டத்தில் திருத்தங்கள் செய்த பிறகு வெளியிடப்படும் என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.
மேற்கண்ட ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பாக தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் தங்களது கவலைகளை பகிர்ந்து கொண்டன. வரிவிலக்கு கோரிக்கைகளின் அடிப்படையில் புற்றுநோய்க்கான மருந்துகள் மற்றும் அரிதான நோய்களுக்கான மருந்துகளுக்கு வரி விலக்கு அளிக்க கவுன்சில் முடிவு செய்துள்ளது. அதேபோல தனியார் நடத்தும் செயற்கைக்கோள் ஏவுதல சேவைகளுக்கான ஜி.எஸ். டி வரிக்கும் விலக்களிக்கப்பட்டு உள்ளது.
மேலும் ஜி.எஸ்.டி மேல்முறையீட்டு தீர்ப்பாயங்கள் படிப்படியாக அமைக்கப்படும் என்றும் முதற்கட்டமாக மாநிலங்களின் தலைநகரங்களிலும் ஹைகோர்ட் கிளைகள் உள்ள இடங்களிலும் அமைக்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் கூட்டத்தில் தெரிவித்தார். இந்த நிதி ஆண்டிலேயே அது செயல்பட தொடங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக வருவாய்த்துறை செயலாளர் சஞ்சய் மல்கோத்ரா கூறினார்.
திரையரங்குகளில் உணவுப் பொருள்கள் மற்றும் பானங்கள் மீதான ஜி.எஸ்.டி விகிதம் 5 சதவீதமாக இருக்கும் என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார். இது தவிர மேலும் பல்வேறு விஷயங்கள் குறித்து ஜி.எஸ்.டி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. ரூபாய் 15 ஆயிரம் கோடி வரிஏய்ப்பு மோசடி பற்றியும் விவாதிக்கப்பட்டது.
SOURCE :DAILY THANTHI