டெல்லியில் கொடூர சம்பவம் - 12 கிலோமீட்டர் தூரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டது இளம் பெண்ணின் உடல்!

டெல்லியில் கார் விபத்தில் பலியான இளம் பெண்ணின் உடல் சுமார் 12 கிலோமீட்டர் தூரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்ட கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது.

Update: 2023-01-03 05:45 GMT

டெல்லியில் அமன் விகார் பகுதியைச் சேர்ந்தவர் அஞ்சலி. தனியார் நிறுவன ஊழியர். திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு சென்று பணிபுரிந்து வந்தார். இதற்கிடையே புத்தாண்டை  ஒட்டி டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள அஞ்சலி சென்றார். நிகழ்ச்சி முடிந்ததும் தனது ஸ்கூட்டியில் நேற்று முன்தினம் அதிகாலையில் வீடு திரும்பி கொண்டிருந்தார். டெல்லியில் சுல்தான்புரி பகுதியில் வந்த போது எதிரே வந்த சொகுசு கார் ஒன்று ஸ்கூட்டர் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அஞ்சலி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அத்துடன் அவரது கால் காரின் டயரில் சிக்கியது இதன் பின்னரும் காரை நிறுத்தாத டிரைவர் அந்த பெண்ணின் சடலத்தை சுமார் நான்கு கிலோமீட்டர் தூரத்துக்கு மேல் இழுத்துச் சென்று விட்டார். சுல்தான் புரியிலிருந்து கஞ்சவாலா பகுதி வரைக்கும் இந்த கொடூர செயலை அவர் அரங்கேற்றினார்.


கஞ்சவாலாவில் சிக்கிய அந்த காரில் இருந்து இளம் பெண்ணின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் காரில் இருந்த ஐந்து பேரை கைது செய்தனர். மேலும் கார் டிரைவர் போதையில் ஓட்டி வந்தாரா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இளம் பெண்ணின் உடல் 12 கீ.மீ தூரத்துக்கு மேல் எடுத்துச் செல்லப்படும் வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காரில் இருந்தவர்களின் மிருகத்தனமான இந்த செயலுக்கு பலரும் கடனம் தெரிவித்தனர்.


மேலும் அஞ்சலியின் சடலம் அரை நிர்வாண கோலத்தில் இருந்ததால் அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கருதப்பட்டது. ஆனால் இது விபத்து தான் என போலீசார் உறுதி செய்துள்ளனர். கல்நெஞ்சையும் கரை வைக்கும் இந்த சம்பவம் டெல்லியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  இந்த விவகாரத்தில் துணைநிலை கவர்னர் சக்சேனா பதவி விலக வலியுறுத்தி கட்சியினர் நேற்று கவர்னர் வீட்டு முன் போராட்டம் நடத்தினர்.ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் அதிஷி, சௌரா பரத்வாஜ் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதே போல இந்த கொடூரத்தை அரிதிலும் அரிதான குற்றமென குறிப்பிட்டுள்ள டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் குற்றவாளிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு துணைநிலை கவர்னரை வலியுறுத்தி உள்ளார்.


இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் இது அரிதிலும் அரிதான குற்றச்சம்பவம். மிகவும் வெட்கக்கேடானது. இந்த சமூகம் எதை நோக்கி செல்கிறது என தெரியவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்கள் எத்தனை செல்வாக்கு பெற்று இருந்தாலும் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என தெரிவித்தார். பின்னர் அவர்  தனது டுவிட்டர் தளத்தில் 'கஞ்சவாலா சம்பவம் குறித்து துணைநிலை கவர்னரிடம் பேசினேன். குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறும் அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டேன். அவரும் இந்த கொடூர குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்' என குறிப்பிட்டு இருந்தார்.





 


Similar News