புதையல் என்றால் முந்து, பாதுகாப்பு என்றால் பிந்து - அரசின் அலட்சியத்தால் கோவில்களில் தொடரும் திருட்டு.!

புதையல் என்றால் முந்து, பாதுகாப்பு என்றால் பிந்து - அரசின் அலட்சியத்தால் கோவில்களில் தொடரும் திருட்டு.!

Update: 2020-12-16 17:55 GMT

திருவிடைமருதூர் அருகே பழமை வாய்ந்த கோவில் பூட்டை உடைத்து அம்மனின் தங்க மாங்கல்யத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவில்களில் அதிகரித்துவரும் கொள்ளை சம்பவங்களை தடுப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

திருவிடைமருதூரில் பாஸ்கரராஜபுரம் என்னுமிடத்தில் 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆனந்தவல்லி சமேத பாஸ்கரேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இங்கு தினமும் காலை மாலை என இருவேளைகளிலும் சிவனடியார் சேனாதிபதி என்பவர் பூஜை செய்து வருகிறார். வழக்கம்போல் மாலை பூஜையை முடித்துவிட்டு இரவு கோவிலை பூட்டிவிட்டு வீடு சென்றுள்ளார்.

 

நேற்று காலை கோவிலை திறக்க வந்த சேனாதிபதிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.கோவிலில் உள்ள நான்கு பூட்டுக்கள் உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது அம்பாள் சன்னதியில் உள்ள தங்கத்தால் செய்யப்பட்ட திருமாங்கல்யம் மற்றும் வெள்ளி பூஜை பொருட்கள் காணாமல் போயிருப்பது தெரிய வந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக கோவில் நிர்வாகி கிருஷ்ணசாமி என்பவர் திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் கோவிலை பார்வையிட்ட பிறகு விசாரணையைத் தொடங்கியுள்ளனர். சமீப காலமாக கோவில்களில் அம்மன் தாலியைக் கூட விட்டு வைக்காமல் திருடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்‌றன.

 

கோவில்களுக்கு பாதுகாவலர்களை நியமிக்க வேண்டும் என்ற சமூக ஆர்வலர்களின் கோரிக்கைக்கு அறநிலையத் துறை செவிமடுக்காததால் இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. புதையல் கிடைத்தால் மட்டும்‌ முண்டியடித்துக் கொண்டு வரும் அரசு அதிகாரிகள் கோவில்களில் இருக்கும் செல்வத்தை பாதுகாப்பதில் அலட்சியம் காட்டுவது பக்தர்கள் இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

Similar News