போரை திணித்தால் போரிடுவோம், எல்லையில் எந்த சவாலையும் இந்தியா முறியடிக்கும் - ராஜ்நாத் சிங் உறுதி

எல்லையில் எந்த சவாலையும் முறியடிக்கக் கூடிய வலிமை இந்தியாவுக்கு இருக்கிறது என்று ராஜ்நாத் சிங் கூறினார்.

Update: 2023-01-04 05:45 GMT

அருணாச்சலப் பிரதேசத்தில் போலங் என்ற இடத்தில் எல்லை சாலை அமைப்பு கட்டிய பாலத்தின் திறப்பு விழா நேற்று நடந்தது. ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பாலத்தை திறந்து வைத்தார்.அதில் அவர் பேசியதாவது :-


இந்தியா எப்போதும் போரை ஊக்குவித்தது இல்லை. அண்டை நாடுகளுடன் சுமூக உறவையே விரும்புகிறோம். இது ராமரிடம் இருந்து பெற்ற தத்துவம். புத்தரிடம் இருந்து பெற்ற போதனை . எல்லையில் எந்த சவாலையும் முறியடிக்கும் வலிமை இந்தியாவுக்கு இருக்கிறது. ஆத்திரமூட்டினால், எந்த சூழ்நிலையையும் சந்திக்க தயாராக இருக்கிறோம். உலகம் இன்று எத்தனையோ மோதல்களை பார்த்துக் கொண்டிருக்கிறது. போரில் இந்தியாவுக்கு நம்பிக்கை இல்லை. இது போருக்கான சகாப்தம் அல்ல என்று பிரதமர் மோடியை கூறியிருக்கிறார். இருப்பினும் நம் மீது போர் திணிக்கப்பட்டால் போரிட தயாராக இருக்கிறோம்.


எல்லாவித அச்சுறுத்தல்களில் இருந்தும் நாடு பாதுகாக்கப்படுவதை உறுதி செய்துள்ளோம். இந்திய ராணுவம் எதற்கும் தயாராக இருக்கிறது. ராணுவத்துடன் எல்லை சாலை அமைப்பு தோளோடு தோள்  நின்று பணியாற்றி வருகிறது. இவ்வாறு அவர் பேசினார். எல்லை சாலை அமைப்பால் கட்டப்பட்ட வேறு 27 கட்டமைப்புகளை ராஜ்நாத்சிங் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.





 


Similar News