ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறி இருப்பது சாதாரண சாதனை அல்ல - பிரதமர் மோடி பெருமிதம்

உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறி இருப்பது சாதாரண சாதனை அல்ல என பிரதமர் மோடி பெருமிதம் பொங்க கூறியுள்ளார்

Update: 2022-09-09 08:00 GMT

குஜராத்தின் சூரத் நகரில் நேற்று மெகா மருத்துவ முகாம் நடந்தது .தொகுதி எம்.எல்.ஏ.வும் வேளாண் இணை மந்திரிமான முகேஷ் படேல் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட இந்த முகாமில் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் பங்கேற்று பேசினார். அப்போது மாநிலம் அடைந்திருக்கும் இரட்டை எஞ்சின் வளர்ச்சியை பாராட்டினார். மேலும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் அவர் சுட்டிக்காட்டி பெருமிதம் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-


சமீபத்தில் இந்தியா உலகின் ஐந்தாவது  பெரிய பொருளாதார நாடாக மாறியுள்ளது .இந்த விடுதலை அமிர்த பெருவிழா காலத்தில் நாம் இன்னும் கடினமாக உழைக்கவும் மிகப்பெரிய இலக்குகளை அடையவும் இந்த சாதனை நமக்கு நம்பிக்கை அளித்து இருக்கிறது. இந்த சாதனை சாதாரணமானதல்ல. ஒவ்வொரு இந்தியனும் இது குறித்து பெருமிதம் அடைகிறோம் .இந்த உற்சாகத்தை தொடர்ந்ததாக வைத்துக்கொள்ள வேண்டும். மத்திய அரசின் பிரதமர் ஆவாஸ் யோஜனா மூலம் நாடு முழுவதும் கடந்த எட்டு ஆண்டுகளில் ஏழைகளுக்கு சுமார் மூன்று கோடி வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் குஜராத்தில் மட்டும் சுமார் 10 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. மாநிலத்தில் 11 ஆக இருந்த மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை தற்போது 31 ஆக உயர்ந்திருக்கிறது .ராஜ்கோட்டில் ஒரு எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது குஜராத்தை சேர்ந்த 30 லட்சம் பேர் உட்பட நாடு முழுவதிலும் இருந்து சுமார் 4 கோடி பேர் மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் பயன்பெற்றுள்ளனர். பிரதமர் கிசான் சமான் நிதி திட்டத்தில் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் இதுவரை 2 லட்சம் கோடி நிதி பெற்று இருக்கிறார்கள். குஜராத்தை சேர்ந்த 60 லட்சம் விவசாயிகளும் இதில் பலனடைந்துள்ளனர்.


விவசாயிகளுக்கு முந்தைய அரசுகள் ஏராளமான வாக்குறுதிகள் அளித்திருந்த போதும் அவர்கள் எதையும் பெறவில்லை. ஆனால் இந்த இரட்டை எஞ்சின் அரசு விவசாயிகளின் நலனை எப்போதும் முக்கியமானதாக கருதுகிறது. இதனால் தான் குஜராத் மற்றும் நாடு முழுவதிலும் உள்ள விவசாயிகள் எங்களை ஆசீர்வதிக்கிறார்கள் இவ்வாறு பிரதமர் மோடி கூறினார் .


முன்னதாக மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் பயன்பெற்று வரும் பயனாளிகளுடன் பிரதமர் மோடி காணொளி மூலம் கலந்துரையாடினார். அந்த வகையில் விதவை ஓய்வூதியம், கிசான் சமான் நிதி, உஜ்வாலா யோஜனா ,ஆயுஷ்மான் பாரத் போன்ற திட்டங்களால் பயன்பெறும் பயனாளிகள் தங்கள் அனுபவங்களை பிரதமர் மோடியுடன் பகிர்ந்து கொண்டனர்.

Similar News