கடந்த கால தவறுகளை இந்தியா திருத்தி வருகிறது-பிரதமர் மோடி பெருமிதம்

இந்தியா கடந்த கால தவறுகளை திருத்தி வருவதாகவும் அறியப்படாத ஹீரோக்களை கொண்டாடி வருகிறது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Update: 2022-11-26 06:45 GMT

அவுரங்கசீப் ஆட்சி காலத்தில் முகலாயர்களை தோற்கடித்த முகலாயப் பேரரசின் எழுச்சியை தடுத்து நிறுத்தியவர் லச்சித் பர்புகான்.அசாமின் அகோம் பேரரசின் படைத்தளபதியாக இருந்த லச்சிப் பர்புகானின் நானூறாவது பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது . இந்த கொண்டாட்டங்களில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது நாட்டின் அறியப்படாத ஹீரோக்களை அரசு கொண்டாடி வருவதாக பெருமிதம் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது :-

இந்திய வரலாறு என்பது வெறும் அடிமைத்தனத்தின் வரலாறு மட்டுமல்ல. மாறாக போர் வீரர்களின் வரலாறு. வெற்றியின் வரலாறு, தியாகம் மற்றும் வீரத்தின் வரலாறும் உள்ளடக்கியதாகும். ஆனால் சுதந்திரத்திற்கு பிறகும் துரதிஷ்டவசமாக காலனித்துதுவ காலத்தில் சதி திட்டத்தின் ஒரு பகுதியாக எழுதப்பட்ட வரலாறு தொடர்ந்து கற்பிக்கப்பட்டது விடுதலைக்கு பிறகு அடிமைத்தனத்தின் நிகழ்ச்சி நிரலை மாற்ற வேண்டிய அவசியம் இருந்தது. ஆனால் அது நடக்கவில்லை. ஒடுக்குமுறையாளர்களுக்கு எதிராக நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் வீரமகன்கள் மங்கையர்கள் போராடினர். ஆனால் வேண்டுமென்றே இந்த வரலாறு மறைக்கப்பட்டது. இன்று இந்தியா காலனித்துவத்தின் தடைகளை உடைத்து முன்னேறி நமது பாரம்பரியத்தை கொண்டாடி அறியப்படாத நமது மாவீரர்களை பெருமையுடன் நினைவு கூர்கிறது.


கடந்த கால தவறுகளை திருத்தி வருகிறது. லச்சித் பர்புகான் ரத்த உறவுகளுக்கு மேலாக தேச நலனை காத்து வந்தார். மேலும் தனது நெருங்கிய உறவினரை தண்டிக்க கூட அவர் தயங்கவில்லை. லச்சித் பர்புக்கான் வாழ்க்கை தலைமுறைகளை தாண்டி நாட்டைப் பற்றி சிந்திக்க நம்மைத் துண்டுகிறது. நாட்டை விட எந்த உறவும் பெரிதல்ல.இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.





 


Similar News